Monday, March 10, 2025

அபிராமி அந்தாதி -67

 

 

அபிராமி அந்தாதி -67

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், மார்ச், 10,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை அறுபத்து ஆறு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் அறுபத்து ஏழாவது பாடலைப் பார்ப்போம்.

இந்தப் பாடலில் பட்டர் அம்பாளை தினம் தோத்திரம் செய்து த்யானம் செய்யாதவர்கள் இறுதியிலடையும் துன்பங்களை விளக்குகிறார்

67. பகைவர்கள் அழிய

தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே.


மின் போலும்

மின்னலைப் போன்ற

நின் தோற்றம்

உன் திருவுருவத்தை

ஒருமாத்திரைப்

ஒரு நொடிப்

போதும்

பொழுதும்

தோத்திரம்செய்து

நினைத்து வணங்கி

மனத்தில்

தம் மனதில்

வையாதவர்

கொள்ளாதவர்கள்

குலம்,

தமது குலம்

கோத்திரம்,

உயர்ந்த கோத்திர்ரம்

கல்வி

பெற்ற கல்வி

குன்றி

ஆகியவற்றின் வன்மை குறைந்து

நாளும்

தின்ந்தோறும்

பொழுதும்

ஊர் ஊராக

குடில்கள்தொறும்

வீடுவீடாகச்சென்று

பாத்திரம்

பிச்சை பாத்திரம்

பலிக்கு

ஏந்தி பிச்சை கேட்டு

உழலாநிற்பர்

அலைந்து நிற்பார்கள்

பார் எங்குமே.

உலகு முழுதும்

 

பொருள்: 

தோத்திரம் செய்து தொழுது – உன் துதிகளைப் பாடி உன்னைத் தொழுதுமின் போலும் நின் தோற்றம் – மின்னலைப் போன்ற உன் திருவுருவத்தை
ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் – ஒரு மாத்திரைப் பொழுதும் மனத்தில் வைத்து தியானிக்காதவர்கள்
வண்மை குலம் கோத்திரம் கல்வி குணம் குன்றி – அவர்களின் வள்ளல் தன்மை, பிறந்த குலம் கோத்திரம், பெற்ற கல்வி, வளர்த்த நற்குணங்கள் எல்லாம் குறைவு பெற்று
நாளும் – தினந்தோறும்
குடில்கள் தொறும் – வீடுகள் தோறும்
பாத்திரம் கொண்டு – பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு
பலிக்கு உழலா நிற்பர் – பிச்சைக்குத் திரிவார்கள்
பார் எங்குமே – உலகமெங்குமே

உரை

தேவி, நின்னை வாயால் துதிசெய்து, உடம்பால் வணங்கி, மின்னலைப்போலச் சுடர்விடும் நின், திருமேனித் தோற்றத்தை ஒரு கணப் போதாவது மனத்தில் இருத்தித் தியானம் செய்யாதவர், கொடைத் தன்மை, குடிப் பிறப்பு, கோத்திரம், கல்வி, நல்ல குணம் முதலியவற்றில் குறைபாடுடையவராகி உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பிச்சைப் பாத்திரத்தைக் கைக்கொண்டு குடிசைதோறும் பிச்சைக்காகத் திரிவார்கள்.

விளக்கம்: 

அன்னையே! அபிராமித்தாயே! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், மார்ச், 10,  2025

 

No comments:

Post a Comment