கோளறுபதிகம் பிறந்த கதை
சிவதாஸன் ஜகன்நாதன்
இன்றைய சிவத்திருமுறைகளில் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் பற்றிப் பார்போம்
கோளறு பதிகம் தோன்றிய வரலாறும் பாடல் விளக்கங்களும் தந்துள்ளேன் படித்து மகிழ்ந்து ஈசனருள் பெற்றுய்யுங்கள்
சிவதாஸன் ஜகன்நாதன்
திருவெண்காட்டுப் பதியில் இறை தரிசனம் கண்டு அப்பர் பெருமானும் ஞானசம்பந்தப் பிள்ளையும் மேற்கொண்ட் உரையாடல் இதோ
'அப்பரே. அடியார் குழாத்தில் இருந்து ஐயனை வணங்குவது மிக மிக அருமையாக இருக்கிறது. தாங்கள் அடியேனைத் தேடி வந்ததும் நாம் இருவரும் இந்த திருவெண்காட்டுத் திருத்தலத்தில் இருந்து மாதொரு பாகனை வணங்கி வாழ்த்துவதும் எல்லாம் ஐயனின் திருவருளே. நாளெல்லாம் இப்படியே சென்றுவிடக் கூடாதா என்று இருக்கிறது நாவுக்கரசப் பெருமானே!'.
'முற்றிலும் உண்மை காழிப்பிள்ளையாரே. நாம் இருவரும் சேர்ந்து அவன் புகழைச் செந்தமிழில் பாடவேண்டும் என்பது ஐயனின் ஆவல் போல் இருக்கிறது. அதனால் தான் நம்மை சேர்த்துவைத்திருக்கிறான்'.
'திருநாவுக்கரசப் பெருமானே. அடியார் குழாம் என்று நான் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டேன். கிடைத்தற்கரிய பேறல்லவா எனக்குக் கிடைத்திருக்கிறது. நற்றுணையாவது நமச்சிவாயமே என்று கல்லைக் கட்டி கடலில் தள்ளிய போதும், சுண்ணாம்பு காளவாயில் வீசப்பட்டப்போதும் இறைவன் திருநாமத்தைச் சொல்லி அந்தத் துன்பங்களில் இருந்தெல்லாம் எந்த வித குறையும் இன்றி வெளிவந்து அரன் நாமத்தின் பெருமையை உலகறியச் செய்த தங்களின் அன்பு அடியேனுக்குக் கிடைத்தது என் பெரும் பாக்கியம்.'
'சம்பந்தப் பெருமானே. அடியேன் மீதுள்ள அன்பினால் தாங்கள் என்னை உயர்த்திப் பேசுகிறீர்கள். அம்மையப்பனை நேரே கண்டு உமையன்னையின் திருமுலைப்பாலை அவளே தர உண்டு திருஞானசம்பந்தர் என்ற திருப்பெயரைப் பெற்று இந்த சின்ன வயதில் ஊர் ஊராய் போய் ஐயனைப் பற்றி அழகான தமிழ்ப் பாடல்கள் பாடி வரும் தங்கள் பெருமையே பெருமை. தாங்கள் வெயிலில் வெகுதூரம் நடக்கக் கூடாது என்று ஐயனே தங்களுக்கு முத்துப்பல்லக்கும் முத்துப்பந்தலும் சிவகணங்களின் மூலம் தந்தாரே. என்னே அவன் அருள்! என்னே தங்கள் பெருமை!'.
அடியார் ஒருவர் குறிக்கிட்டு, 'பெருமானே. மதுரையில் இருந்து மகாராணி மங்கையர்கரசியாரிடமிருந்தும் அமைச்சர் குலச்சிறையாரிடமிருந்தும் செய்தி வந்துள்ளது', என்று கூறி ஒரு ஓலையை சம்பந்தரிடம் தருகிறார். அதனைப் படித்துவிட்டு காழிப்பிள்ளையார் அப்பரைப் பார்த்து
'ஐயனே.பாண்டியன் தேவியாரும் குலச்சிறையாரும் அடியேனை மதுரையம்பதிக்கு வந்து ஆலவாய் அரசனின் ஆலய தரிசனம் செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஓலையைப் பார்த்தவுடன் உடனே சென்று அன்னை அங்கயற்கண்ணியுடன் அமர்ந்திருக்கும் திருஆலவாயானைப் பார்க்கவேண்டும் போல் ஆவல் கூடுகிறது'.
திருநாவுக்கரசர் ஒன்றுமே சொல்லாமலும் முகவாட்டம் அடைவதையும் பார்த்து, 'பெருமானே. ஏன் தயங்குகிறீர்கள்? உடனே திருஆலவாய்க்குச் செல்லவேண்டும் என்று என் மனம் பொங்குகிறது. ஆனால் தாங்கள் எதையோ எண்ணிக் கலங்குவதாய்த் தோன்றுகிறது. என்னவென்று தயைசெய்து சொல்லுங்கள்'.
'ஒன்றும் இல்லை பிள்ளையாரே. பாண்டியன் சமணனாய் மாறிவிட்டான். மதுரையில் சமணர் ஆதிக்கம் அளவில்லாமல் போய்விட்டது என்று கேள்விப்பட்டேன். என் இளம்வயதில் சமணரால் அடியேன் அடைந்த துன்பங்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்திருக்கும். சிறு பிள்ளையான தாங்கள் மதுரைக்குச் சென்றால் அந்த சமணர்களால் ஏதாவது ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன். அதனால் தாங்கள் மதுரைக்குச் செல்லவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்'.
'அப்பரே. என் தந்தையாரைப் போன்ற அன்பு என் மேல் தங்களுக்கு இருப்பதால் தான் அடியேன் உங்களை அப்பர் என்று அழைத்தேன். உங்களுக்கு சமணர்களால் விளைந்த துன்பங்களெல்லாம் எந்த இறைவனின் திருவருளால் விலகியதோ அதே இறைவன் திருவருள் அடியேனையும் காக்கும் என்பதனை மறந்து கலங்குகிறீர்களே. தாங்கள் இப்போது கலங்குவதைப் பார்க்கும் போது நான் உங்களை அப்பர் என்று அழைத்தது மிகச் சரி என்று தெளிவாகிவிட்டது. என்னை தயைசெய்து தடுக்கவேண்டாம்.'
'அது மட்டும் இல்லை ஐயனே. இன்று நாளும் கோளும் சரியில்லை. அதனால் இன்று நீங்கள் கிளம்பி மதுரைக்குச் செல்லாமல் பிறிதொரு நாள் சென்றால் மிக்க நலமாகும் என்று அடியேன் எண்ணுகிறேன்'.
'அப்பரே. நாளும் கோளும் அடியார்க்கு என்றும் மிக நல்லவை என்று தாங்கள் அறியாததா.
என்று சொல்லி வேயுறு தோளி பங்கன் என்று தொடங்கும் கோளறு பதிகம் என்ற பதிகத்தின் பதினொறு பாடல்களையும் ஞானசம்பந்தர் பாடியருளினார்
அடுத்த பதிவில் அந்த பாடல்களைப் பொருளுடன் பார்ப்போம்
இன்று இத்துடன் இந்தப் பதிவஈ நிறைவு செய்கிறேன்
பாடல் விளக்கங்களை அடுத்த பதிவில் தருகிறேன்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment