திருவிளையாடல் புராணம்
1 அறிமுகம்
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையுமதெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.
முன்பின் தெரியாத ஊருக்குச் செல்லும் போது,
அந்த ஊர் பற்றிய விபரங்களை விபரமறிந்தவர்களிடம் கேட்டோ, இணையத் தளங்கள் மூலம் அறிந்தோ செல்வது அங்கு சென்று வர எளிதாக இருக்கும்.
புராணங்களைப் படிக்கும் முன்பும் அப்படியே. புராணக்கதைகளை மட்டும் படித்தால் போதாது. அதை எழுதியவர் யார், அவரைப் பற்றிய விபரம், எந்தச் சூழ்நிலையில் எழுதினார், அவரை எழுதத் தூண்டியவர்கள் யார் என்பது பற்றியும் தெரிந்து கொண்டால், படிப்பவர்களுக்கு அதுபற்றிய முழுமையான விபரமும் தெரியவரும்.
கூடல்மாநகராம் மதுரையில் சிவபெருமான் செய்த அற்புதலீலைகளை ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லியுள்ளார்கள். வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்திதேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது.
ஹாலாஸ்ய மகாத்மியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது
வேதாரண்யத்தில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகனே பரஞ்சோதி. தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் போதித்தார். நீறிட்ட உடலுடன் வேதாரண்யத்து பெருமானை துதித்து வந்த பதஞ்சலி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோயில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரையம்பதிக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய அன்னை மீனாட்சி, சிவபெருமான் அந்நகரில் நிகழ்த்திய லீலைகளை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அன்னையின் திருக்காட்சி கண்ட பரஞ்சோதி முனிவர் தெள்ளுதமிழில் இனிய பாடல்களை வடித்தார். அதுவே திருவிளையாடல் புராணம். இது 64 படலங்களைக் கொண்டது. முதல் 18 படலங்கள் மதுரை காண்டம் என்றும், 19 முதல் 48 வரையான படலங்கள் கூடற்காண்டம் என்றும், 49 முதல் 64 வரையான படலங்கள் திருவாலவாய் காண்டம் என்றும் பெயர் பெற்றுள்ளன.
பிரம்மா ஒருமுறை ஒரு தராசுத் தட்டில் கைலாயத்தை ஒரு தட்டிலும், மதுரையம்பதியை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்தார். அப்போது, மதுரை இருந்த தட்டு தாழ்ந்தது. கயிலையை விட மதுரை மிகச்சிறந்த தலம் என்ற முடிவுக்கு வந்தார். அத்தகைய பெருமை பெற்ற மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. திருவிளையாடல் புராணத்தை அரங்கேற்ற பரஞ்சோதி முனிவர் தயாராகி விட்டார். மக்கள் அனை வரும் சுந்தரேஸ்வர பெருமானின் திவ்ய லீலைகளைக் கேட்பதற்கு வரவேண்டும் பாண்டிய மன்னரின் சார்பில் பறையறைந்து தெரிவிக்கப் பட்டது. தேரோடும் வீதிகளை மக்கள் கோமயம் தெளித்து சுத்தமாக்கினர். அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. வாழை மரத் தோரணங்களை மக்கள் தங்கள் இல்லங்கள் முன்பு கட்டினர். இன்றைய சித்திரை திருவிழாவுக்கு நகரை அலங்கரிப்பது போல், மக்கள் வெகு விமரிசையான ஏற்பாடுகளை அவரவர் செலவில் செய்தனர்.
இந்த விபரத்தையறிந்து வெளியூர்களில் இருந்தெல்லாம் சிவனடியார்கள் மதுரையை மொய்த்தனர். எங்கும் சிவாய நம என்ற திருமந்திரம் ஒலித்தது. திருவிளையாடல் புராண அரங்கேற்றத்தை நடத்த பெரிய மண்டபம் வேண்டும், என்ன செய்யலாம் என யோசித்தனர் அமைச்சர்கள். கோயிலுக்குள் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் அமரலாம், மண்டபத்துக்கு வெளியேயும் மக்களை கூடச் செய்யலாம் என்ற அடிப் படையில் மண்டபத்தை சீரமைத்தனர். அலங்கார மேடை ஒன்றில் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டு, பரஞ் சோதியார் எழுதிய திருவிளையாடல் புராண ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. பரஞ்சோதியார் விழா மேடைக்கு வந்தார். அப்போது திருச்சங்குகள் முழங்கின. முரசுகள் ஆர்ப்பரித்தன. மங்கல வாத்தியங்கள் முழங்கின. பாண்டிய மன்னர் பரஞ்சோதியாரை எதிர்கொண்டு வரவேற்று, பொன்னாடை போர்த்தினார்
அனைவரும் அன்னை மீனாட்சியின் சன்னதிக்குச் சென்றனர். கற்பூர ஒளியில் மரகதவல்லி மீனாட்சி தகதகவனெ ஜொலித்து ஆசிர்வதித்தாள். அடுத்து சுந்தரேஸ்வரப் பெருமானின் சன்னதிக்குச் சென்று, அரங் கேற்றம் மிகச்சிறப்பாக அமைய வேண்டினார் பரஞ்சோதி முனிவர். பின்னர் மண்டபம் திரும்பி, விநாயகப் பெருமானை மனதில் எண்ணி கணீர் என்ற குரலில் திருவிளையாடல் புராணத்தை சொல்ல ஆரம்பித்தார்.
சக்தியாய் சிவமாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதி செயச்
சுத்தியாகிய சொற்பொரு ணங்குள
சித்தி யானை தன் செய்பொற் பாதமே!
என்று விநாயகரை வணங்கிப் பாடினார்.
தொடர்ந்து மதுரையின் சிறப்பு, புராண வரலாறு ஆகிய முன்னுரைக்குப் பின், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் சிறப்பைச் சொன்னார். இந்தக் குளத்தைப் பார்த்தால் தர்மம் செய்த புண்ணியம் சேரும். தீர்த்தத்தைத் தொட்டால் செல்வம் பெருகும். மூழ்கி எழுந்தால் மோட்சம் கிடைக்கும் என்றார்.
தொடர்ந்து அறுபத்து நாங்கு திருவிளையாடல் களையும் வியாழன் தோறும் பார்ப்போம்
ஓம் நமக்ஷிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment