இன்றைய திருக்கோவில்
சிவதாஸன் ஜகன்நாதன்
அருள்மிகு அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்
திருத்தலம் | அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில் |
மூலவர் | அப்பக்குடத்தான் |
உற்சவர் | அப்பால ரெங்கநாதன் |
அம்மன் | இந்திரா தேவி, கமலவல்லி |
தீர்த்தம் | இந்திர தீர்த்தம் |
ஆகமம் | பாஞ்சராத்திரம் |
தலமரம் | புரசை |
புராண பெயர் | திருப்பேர் நகர் |
ஊர் | கோவிலடி, திருக்காட்டுப்பள்ளி |
மாவட்டம் | தஞ்சாவூர் |
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோவில் வரலாறு
நம்மாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்தலம் திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இயற்கையின் அரவணைப்பில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள அழகான தலமாகும் அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்.
உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர், “மன்னா! பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்” என்றார்.
இதன்படி மன்னன் கோவிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன், “ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,” என கேட்டான். அதற்கு அவர், எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும் என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்ந்தது என தல வரலாறு கூறுகிறது.
இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்றும், ஸ்ரீரெங்கத்திற்கு முன்னதாக ஏற்பட்டதென்றும் அதனால் தான் கோயிலடி அதாவது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்துக் கொடுத்த ஸ்தலமென்பதால் கோவிலடி என பெயர் பெற்றதாக கர்ண பரம்பரை.
பஞ்ச ரங்கம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்கங்களில் இதுவும் ஒன்று:
1. ஆதிரங்கம் – ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்)
2. அப்பால ரெங்கம் – திருப்பேர் நகர்
3. மத்தியரங்கம் – ஸ்ரீரெங்கம்
4. சதுர்த்தரங்கம் – கும்பகோணம்
5. பஞ்சரங்கம் – இந்தளூர் (மாயவரம்)
இந்த பஞ்சரங்கத்தைப் பற்றி குறிப்பிடும்போது ஸ்ரீரங்கத்தை மத்தியரங்கம் என்று சொல்லுவதால் 5 இல் மத்திமமான 3வது இடத்தை ஸ்ரீரங்கம் பெற்றது. எனவே அப்பாலரங்கம் ஸ்ரீரங்கத்தைவிட முன்னானது என்னும் கருத்தை ஒப்பலாம்.
நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் 33 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். நம்மாழ்வார் இப்பெருமானைப் பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்குச் சென்றார். நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது தான்.
அப்பம் அமுது செய்து தினந்தோறும் படைக்கப்படும் திவ்ய தேசம் இது ஒன்றுதான். ஸ்ரீரெங்க ராஜ சரிதபாணம் என்னும் நூல் இத்தலம் பற்றிய குறிப்புக்களை கொடுக்கிறது. இத்தலமும், சூழ்ந்துள்ள இயற்கைக் காட்சிகளும் திருமங்கையாழ்வாரின் பாடல்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. காவிரிக் கரையில் ஒரு மேட்டின் மேல் அமைந்துள்ள இக்கோவில் தொலை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும், கொள்ளிட நதியில் ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பதற்கும் பேரழகு வாய்ந்தது.
ஆழ்வார்கள் ஒரு ஸ்தலத்தில் அனுபவிக்கும் பெருமாளை மற்றோர் ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்யும்போது மறக்கவொன்னா ஆற்றாமையால் மீண்டும் மங்களாசாசனம் செய்வது மரபும் வழக்கமுமாயிற்று. திருப்பேர் நகரில் வணங்கிப் போன பின்பும் அப்பக்குடத்தான் திருமங்கை மன்னனை விடாது பின் தொடர்கிறார். தம்மை விட்டு நீங்காத அந்த அர்ச்சாவதார சோதியை திருவெள்ளறை சென்று கண்டேன் என்று மீண்டும் மங்களாசாசனம் செய்கிறார்.
கோவில் அமைப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 6 வது திவ்ய தேசம். இறைவன் கருவறையில் புஜங்க சயனத்தில் உள்ளார். தாயார் கமலவல்லி அமர்ந்த கோலத்தில் காட்சி. உற்சவர் செப்புத் திருமேனிகள் உள்ளன.
கொள்ளிடத்தின் தென்கரையில் அமைந்துள்ள திருப்பேர் நகர் என்னும் அப்பக்குடத்தான் திருக்கோவில் ஆற்றங்கரைக் கோவிலாகவும் மாடக்கோவிலாகவும் காட்சியளிக்கின்றது. இக்கோவில் சோழர்கள் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது. இக்கோவிலின் கருவறை விமானம் இந்திர விமானம் என்ற கட்டடக் கலைப் பிரிவைச் சார்ந்துள்ளது. இராஜகோபுரத்துடனும், உள்ளே பலிபீடம், கொடிமரம், கருடமண்டபம் தாண்டிச் சென்றால் பெரியத் திருச்சுற்றும் காணப்படுகின்றன. இத்தலத்தில் வழிகாட்டி விநாயகர் உள்ளார்.
பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்சனை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
திறக்கும் நேரம்: காலை 07:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:30 மணி முதல் இரவு 08:00 மணி வரை அப்பக்குடத்தான் பெருமாள் கோவில் திறந்திருக்கும்.
திருவிழாக்கள்: பங்குனி உத்திரம் தேர், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கிருஷ்ணனுக்கு உறியடி உற்சவம்.
அப்பக்குடத்தான் கோவில் செல்லும் வழி
அப்பக்குடத்தான் கோவில் திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ளது. அன்பில் திவ்ய தேசத்திலிருந்து கொள்ளிட நதியின் மறுகரையைச் சேர்ந்தால் இத்தலத்தை அடையலாம். பூதலூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ. கல்லணையில் இருந்து 4 மைல் தொலைவிலும் உள்ளது
மீண்டும் சந்திப்போம்
சிவதாஸன் ஜகன்நாதன்