Friday, May 3, 2024


பழங்காலத்தில் கோவில் வழிபாடு

சிவதாஸன் ஜகன்நாதன்

இப்பொழுது சில கோவில்களுக்குள் சென்று இறைதரிசனம் செய்து வழிபடுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. காசு கொடுத்தால், முன்னால் சென்று தரிசனம்செய்யலாம்.  இல்லாவிடில், வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.  சில விநாடிகள்கூட தமது உள்ளக்கிடக்கையைக் கொட்டி, தெய்வத்தின் திவ்ய தரிசனத்தைக் கண்குளிரக் காணமுடிவதில்லை.  மின்னல் மின்னி மறைவதுபோல தெய்வத்தின் காட்சி நமது கண்ணைவிட்டு நீங்கிவிடுகிறது.  ஏக்கத்துடன்தான் வெளிவருகிறோம்.

அர்ச்சனை செய்யக்கூட முடியாது. அர்ச்சகர் நம் கண்ணில் தெய்வத்தைப்போல ஓரிரு விநாடிகள்தான் தென்படுவார். 

இருந்தாலும், அக்கோவில்களில் கூட்டத்திற்கு என்றுமே குறைவில்லை.  நாளுக்கு நாள் அது அதிகரித்துக்கொண்டே போகிறது.

இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால் – செல்ல மனமிருந்து – அங்கும் இறைவன்/இறைவி குடிகொண்டுள்ளனர் என்ற நினைப்பு வந்து அங்கு சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது.  கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.  நாம் முன்பு விவரித்த கோவில்களில் இருக்கும் ஜே ஜே என்ற கூட்டத்தில் நூற்றிலென்ன, ஆயிரத்தில் ஒரு பங்கு கூட்டம்கூட அங்கு இல்லை.

கண்ணைப் பறிக்கும் ஒளிவிளக்குகளும் அங்கில்லை.  எங்கோ மூலையில் ஒரு மங்கலான விளக்கு மினுக், மினுக்கென்று எரிந்துகொண்டிருக்கிறது.  நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் மக்களும் இல்லை, ‘போ, போ’ என்று விரட்டும் கோவில் காவலரும் இல்லை.

இறைவன்/இறைவி – நாம் மட்டுமே அக்கோவிலில்.  வேண்டும் அளவுக்கு நமது உள்ளக் கிடக்கையை மனம்விட்டு உரக்கச் சொன்னாலும் அது அத்தெய்வங்களின் காதில் மட்டுமே விழும்.  மற்றவர் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற ஐயப்பாடும் தேவையில்லை.  யாராவது அங்கிருந்தால்தானே, நாம் சொல்வது அவர்கள் காதில் விழுவதற்கு?

அர்ச்சகர்கூட சில கோவில்களில் காணப்படுவதில்லை.  நாம் தேடிக்கொண்டு சென்றால், அகப்படுவார்.  அருச்சனை செய்யவேண்டுமென்றால் நம்மை வியப்பு-கலந்த மகிழ்வுடன் பார்ப்பார்.  பக்தி சிரத்தையுடன் அருச்சனை செய்வார்.  நாம் கொடுக்கும் காணிக்கையை மிகவும் நன்றியுடன் பெற்றுக்கொள்வார்.

மேலே விவரித்த இருவிதக் கோவில்களைத்தான் நம்மால் காணமுடியும். 

பழங்காலத்தில் கோவில்கள் இப்படித்தான் இருந்தனவா?  வழிபாடுகள் கோவில்களில் இப்படித்தான் நடந்தனவா?

எப்படி நடந்தன என்பதை நமக்குத் தமது தோத்திரங்கள், பாசுரங்கள் வாயிலாக சைவ, வைணவக் குருமார்களும், ஆள்வார்களும் நமக்கு எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள்.  கோவில்கள் இப்படித்தான் அன்று இயங்கின என்று நாம் அறிந்துகொள்ள அவர்கள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.

தமது சொல்வன்மையால் மாணிக்கவாசகர் என்று அழைக்கப்பட்ட திருவாதவூரார் நம்மை அவர் காலத்துக் கோவில் வழிபாட்டிற்கு அழைக்கிறார்.  முதலில் அவருடன் செல்வோமா?  தமக்கே உரிய மாணிக்கச் சொற்களாக, இறைவழிபாட்டை மாலையாகத் தொகுத்து நமக்கு விளக்குகிறார்.

இன்னிசை வீணையர் யாழின ரொருபால்

இருக்கொடு தோத்திர மியம்பின ரொருபால்

துண்ணிய பிணைமலர்க் கையின ரொருபால்

தொழுகைய ரழுகையர் துவள்கய ரொருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

என்னையு மாண்டுகொண் டின்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி யெழுந் தருளாயே!

 

கோவிலை நெருங்கும்போது, யாழ், வீணை போன்ற இசைக் கருவிகளிலிருந்து எழும் இன்னிசை நம்மைப் பரவசப்படுத்தி அழைக்கிறது.  இந்த இசையின்ப வெள்ளத்தில் நீந்தி நாம் உள்ளே செல்கிறோம். அங்கு பாணர்கள் இசைக்கருவிகளை மீட்டி, இறைவன்மீது தமக்குள்ள பக்தியை வெளிப்படுத்தி ஆனந்தவெள்ளத்தில் ஆழ்வதையும், நம்மை ஆழ்த்துவதையும் காணலாம்.

.  ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்களுடன், பலவிதமான தோத்திரங்களுடன் இறைவன்முன் ஓதிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு வேதம் மட்டுமல்ல, நான்கு வேதங்களையும் முறையாகக் கற்றவர்கள் பிழையின்றி அதை ஓதுகின்றனர்.  அவர்கள் இப்படி ஓதிக்கொண்டிருக்கையில், இன்னும் சிலர் இறைவன்மீது துதிப்பாடல்களைப் பாடுகின்றனர்.  இந்த வேதகோஷத்திலும், தோத்திரப்பாடல் ஒலிகளுடனும், வீணை, யாழ் இவற்றின் நாத வெள்ளமும் நம்மை இறைவனைத் தரிசித்து இறையருள்பெற அழைக்கிறது

இன்னொரு பக்கத்தில், இறைவன் திருமேனியை அலங்கரிக்க நெருக்கமாக மலர்களைத் தொடுத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர்.  தமது கைகளையே மலர்மாலையாக எண்ணி, அதைப் பின்னலாகப் பின்னி இறைவனை அந்த மாலைக்குள் அடக்க முயல்கின்றனர், வேறுசிலர்.

சிலர் இறைவனைத் கைகூப்பித் தொழுது நிற்கின்றனர்.  இன்னும் சிலர் தமது குறைகளைச் சொல்லி அழுது, அதைப் போக்கி அருளுமாறு புலம்புகின்றனர். வேறுசிலர் தம்மை வருத்திக்கொண்டு, கோவில் தரையில் புரண்டு, அவனது கோவில் பிரகாரத்தைச் சுற்றிவந்து, தம் மனவிருப்பத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகின்றனர்.

மற்றும் சிலர், தலைக்குமேல் கைகளை உயர்த்திக்கூப்பி, இறைவனுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாக நிற்கின்றனர்.  

திருப்பெருந்துறை என்னும் புண்ணியத் தலத்தில் குடிகொண்டுள்ள சிவபெருமானே!  நீ எனக்கு இறைவனாகத் தலைவனாகத் தந்தையாகத் தாயாகத் தடுத்தாட்கொண்டு உனது இனிய அருளை வாரிவழங்குகிறாய்!  இல்லையென்று சொல்லவில்லை.  ஆனால், உன் அருளைவேண்டி இத்தனை பேர் பலவிதமாக உன்னைத் துதித்து நிற்கிறார்களே! இவர்களுடைய குறையை நீக்க மாட்டாயா?  ஏன் கண்ணை மூடிக்கொண்டு உறங்குவது போல நடிக்கிறாய்?  நீ தூங்கியது போதும்.  என் பெருமானே!  உனது போலி உறக்கம் போதும்!  எழுந்திருந்து உன் அடியவர்களுக்கு வேண்டியதை வாரி வழங்கு!”

இதுதான் அன்றையக் கோவில்களில் நிகழ்ந்த வழிபாடு.  திருவாசகத்திற்கு உருகாதார் எவருமேயில்லை, அப்படி உருகாதவர் எப்படிச் எடுத்துரைத்தாலும் உருகமாட்டார் என்று தன் சொல்வன்மையால், பக்திப்பெருக்கால் மாணிக்கவாசகர் இயம்பிய திருப்பள்ளியெழுச்சிப் பதிகத்தில் ஒரு செய்யுள்தான் பழங்கால் வழிபாட்டை விவரித்து இன்றும் மார்கழி மாதந்தோறும் பாடப்படுகிறது.

ஆனால், மாணிக்கவாசகர் விவரித்த கோவில் வழிபாட்டை நாம் என்று காண்போமோ, அது அந்த உமையொருபங்கன், சிவபெருமானுக்குத்தான் தெரியும்போலிருக்கிறது.

 


Wednesday, May 1, 2024

 


ஒருமையுடன் நினது திருமலரடி

இன்று வள்ளல பெருமானின் இந்த அழகான                              கந்தக்கோட்த்துள் உறையும் முருகனிடம்                                                        அவர்  வேண்டும் அழகிய பாடலைப் பார்ப்போம்   

சிவதாஸன் ஜகன்நாதன்

 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

 

ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம். 

நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம்.

ஆனால் நமக்கு என்று சுயநலம் ஏதுமில்லாமல் இறைவனிடம் வேண்டுவதே உண்மையான பக்தியாகும்

. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் நினது மலரடி நினைப்பவரன் அடியவர்கள் உறவு வேண்டும்.                                                                                                                

 

வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம்.  உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை.

நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார். 

 

இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார். 

உண்மையான அறநெறியை நான் விடாது பற்ற வேண்டும் எனக்குக்கு மதம் என்ற பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" அதோடு மும்மலங்களான் ஆணவம் கண்மம் மாயை என்ற பேய்கள் பிடிக்காதிருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்

 

கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்து விட வேண்டும். அதே நேரம் இறைவனே நான் இமைப் பொழுதும் உன்னை மறவாதிருக்க வேண்டும் எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும்.

 

நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும். 

சென்னையில் கந்தக் கோட்த்துள் உறையும் கந்தவேளே !

குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

- வள்ளலார்

நாமும் கந்தனிடம் இவைகளையே வேண்டி அவனருள் பெற்றுய்வோம்

 

சிவதாஸன் ஜகன்நாதன்

 


 


திருவையாறு பதிகம்

 

இன்று திருவையாறு பதிகத்தின்                                                                  பிற பாடல்களைப் பார்ப்போம்

சிவதாஸன் ஜகன்நாதன்

இரண்டாவது பாடல்

போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவன் நின்றேத்தும் ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

 

சந்திரனுடைய இளைப்பாகிய பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானை ,                                                                                                                             பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த பார்வதியோடு இணைத்துப்பாடி ,                                                                                                             ` அவர்கள் திருவடி வாழ்க ` எனவும் ,                                                                                   ` அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம் `                                                            எனவும் சுழன்று ஆடிக்கொண்டு வரும் அடியேன்                                                  சக்கரப்படையை வலக்கையில் ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது                                                                        ஆண்கோழி பெண்கோழியுடன் கூட இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன் .                                                                        அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால்                                     திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


மூன்றாவது பாடல்

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழுகும் வெள்ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

 

நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும் ,                                   இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முக மலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன்                                    மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில்                                                                                                                       காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க . இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன் .                                                                                                                     அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


நான்காவது பாடல்

 

பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

 

பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப்பாடி நீர்த்துறையை அடுத்துவளர்ந்த செடி கொடிகளின் பல மலர்களையும் அடியேன் தோள்கள் மகிழுமாறு அருச்சித்து                                                    நான் தொழுவேனாய்ப்                                                                                               பாடும் இளங் குயில்கள் ஒலிக்கும் ஐயாறு அடைகின்றபோது , இளைய பேடையோடு கலந்து வெண் சிறகுகளை உடைய சேவல் அன்னம் இணையாக வருவனவற்றைக் கண்டேன் .                                               அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

இன்று இந்த மூன்று அழகான பாடல்களையும் படித்து மக்ழுங்கள்

அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்

 

சிவதாஸன் ஜகன்நாதன்