Saturday, April 15, 2023

 



 

 

 

 

பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்

இந்த அழகான ஆய்வுக் கட்டுறையை அடியேன் படித்து மகிழ்ந்தபோது இதை நம்முடைய அறிவுசால் நன்பர்களுடன் பகிர்ந்துகொள்லாம் என் எண்ணி அதில் தேவையற்ற கருத்துக்களை நீக்கி இந்த அருமையான கட்டுறையை பதிப்பித்துள்ளேன் அனைவரும் தவறாது இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன்

சிவதாஸன் ஜகன்நாதன்

(தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.)

மிழறிஞர் ஒருவர் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவில் பேசுகையில், சித்திரை, வைகாசி முதலிய 12 மாதங்களின் பெயர்களும், அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் முழுமதி நாள் (பௌர்ணமி) நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்ட பெயர்கள்தாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்தினை மறுத்துப் பேசிய சிலர், சித்திரை, கார்த்திகை என்ற இரு மாதங்களின் பெயர்கள்தாம் நட்சத்திரப் பெயர்கள் என்றும், பிற மாதங்களின் பெயர்களுக்கும் நட்சத்திரங்களின் பெயர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டு, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் பூசை என்றும், மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் மகம் அல்லது மகை என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் வினவியுள்ளனர்

சேரன் செங்குட்டுவன், கனக விசயர் மீது படையெடுத்துப் புறப்படுவதற்கு நல்ல நேரம் (முகூர்த்தம்) குறித்துக் கொடுக்கிற சோதிடன் “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோன்” எனக் குறிப்பிடப்படுகிறான். 

 

ஐவகைக் கேள்வி என்பது பஞ்சாங்க அறிவாகும். “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று” என்றால் 12 ராசிகளிலும் இருக்கின்ற கிரக நிலைகளைக் கற்று என்று பொருளாகும்.

ஜாதகத்தில் இருக்கின்ற 12 ராசிகளை மதி என்றே சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதாவது சித்திரை மதி தொடங்கி பங்குனி மதி முடிய இருக்கிற 12 ராசிகள் என்பது பொருளாகும்.

 

மதி என்ற சொல்லில் இருந்தே மாதம் என்ற சொல் தோன்றிற்று. தமிழிலும் நிலவைக் குறிக்கிற திங்கள் என்ற சொல்லைத்தான் மாதத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

 ஆங்கிலத்தில் வழங்குகிற Month (மாதம்) என்ற சொல் Moon என்ற சொல்லில் இருந்தே தோன்றியதாகும்.

எனவே, சித்திரை நட்சத்திரத்தில் முழுமதி திகழ்கிற மாதம் சித்திரை மாதம் ஆகும். அதே சிலப்பதிகாரத்தில், இந்திர விழவூரெடுத்த காதையில் (வரி 64) ”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்ற குறிப்பு உள்ளது இதற்குச் சான்றாகும்.

 அது போன்றே, விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் வைசாகி அல்லது வைகாசி ஆகும். இன்றும் வட இந்தியாவில் வைசாகி என்ற பெயர் வழக்கில் உள்ளது.

 

விசாக நட்சத்திரத்தின் பெயரை ஆட்பெயராகக் கொண்ட விசாகன் என்ற பெயருடையவர்கள், சங்க காலத்தில் இருந்துள்ளார்கள். இப்பெயர் வியாகன், வியகன், வியக்கன் என்ற வடிவங்களில் வழங்கியுள்ளதென ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமது Early Tamil Epigraphy என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

 

சித்திரை, விசாகம் என்ற நட்சத்திரப் பெயர்களைப் போன்றே அனுஷம் என்ற நட்சத்திரமும் ஆனுஷி என்ற மாதப் பெயராக வழங்கத் தொடங்கி அதுவே ஆனி எனத் திரிந்திருக்கிறது. அனுஷம் அல்லது அனுடம் அல்லது அனிழம் என்ற நட்சத்திரம் முடப்பனை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுஷ நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமாகிய ஜேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கருதுகிற மரபும் உண்டு. அந்த அடிப்படையில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

இவ்விரண்டு நட்சத்திரங்களிலும் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், இவற்றை அடுத்து வருகிற மூல நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்கிற வழக்கமே தற்போது நடைமுறையில் உள்ளது.

 மார்கழி மாத மிருகசிரஸ் நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அதற்கு அடுத்த நட்சத்திரமான சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலா நாள் அமைவதாகக் கொள்வதை இதனையொத்த நிகழ்வாகக் கருதலாம்.

பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது.

 

சிராவணம் என்ற நட்சத்திரம் திருவோணம் எனத் தமிழில் வழங்குகிறது. ஓணம் என்று இதனைக் குறிப்பிடுவதுண்டு. சிராவண நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைகிற மாதமே சிராவணி ஆகும். இது ஆவணி என வழங்கப்படுகிறது. சிரமணர் என்பது சமணர் எனத் திரிந்து அமணர் என வழங்குவது போன்றதே இம்மாற்றமும் ஆகும். ஆவணி மாத முழுநிலா நாள் ‘ஓண நன்னாள்’ என மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

பூர பாத்ர பதம் என்கிற நட்சத்திரப் பெயர் பூரட்டாதி எனத் தமிழில் வழங்கும். இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் புரட்டாசி எனத் தமிழில் வழங்குகிறது.

 

அசுவதி நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் வட இந்தியாவில் ஆஸ்வின மாதம், ஆஸ்விஜ மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழிலோ அற்பசிஐப்பசி, அற்பிகை என்றெல்லாம் வழங்கியுள்ளது. இவற்றுள் ஐப்பசி என்பதே வழக்கில் நிலைத்துவிட்டது.

 

கார்த்திகையை அனைவரும்  ஏற்றுக்கொண்டு விட்டதால் அதைப் பற்றி நாம் எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை.

 

மான் தலை போன்று தோற்றமளிக்கும் நட்சத்திரக் கூட்டம் மிருகசிரஸ் என்று வடமொழியில் வழங்கிற்று. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மார்கசிருஷி என வடமொழியில் வழங்கத் தொடங்கி, தமிழில் மார்கழி எனத் திரிந்துள்ளது. பிராகிருத மொழியில் மிருகசிரஸ் என்பது மகசிர என வழங்கிற்று. மார்கழி மாதமும் மகசிர என்ற நட்சத்திரப் பெயராலேயே பிராகிருதத்தில் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரம் இலங்கையில் வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளது. ‘யாப்பருங்கலவிருத்தி’ என்ற பழமையான இலக்கண நூலில் மகயிரம் என இந்நட்சத்திரப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பூச நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் தை என்று எப்படிப் பெயர் பெற்றது என்பது  கேள்வி. பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும், திஷ்யம் என்றும் இரு வகையாக வழங்கும். திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கப்படத் தொடங்கி தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது. தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது.

தைசம் என்பது பூசம் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று 1910ஆம் ஆண்டில் கதிரைவேல் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட சங்கத்து அகராதி குறிப்பிடுகிறது. புஷ்யம் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பௌஷ்ய மாதம் என்றும், பௌஷ மாதம் என்றும் தைத் திங்களைக் குறிப்பிடுவதும் உண்டு..ஐராவதம் மகாதேவன், திஷ்யம் என்ற நட்சத்திரப் பெயர் சங்க காலத் தமிழகத்தில் ஆட்பெயராகச் சூட்டிக் கொள்ளப்பட்டது என்றும், திஸ்ஸன், திய்யன், தீயன் என்ற வடிவங்களில் இப்பெயர் வழங்கியுள்ளது என்றும் நாம் மேலே குறிப்பிட்ட நூலில் எழுதியுள்ளார்

தை மாதம், ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று பிறக்கிறது என்ற கணக்கீடு பஞ்சாங்கக் காரர்களால் தாம் கணித்துச் சொல்லப்படுகிறது ‘ஆரிருமதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோர்களால்’தான் சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்குகிற நாள் என்ற அடிப்படையில் தை முதல் நாள் கணக்கிடப்படுகிறதே தவிர ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வானநூல் கல்வியில் தேர்ச்சி பெற்ற கோள் ஆய்வு நிபுணர்களால் அல்ல.

மக நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மாகி என வழங்கத் தொடங்கிப் பின்னர் மாசி எனத் திரிந்துள்ளது. கரம், ஹரமாகத் திரிந்து ஒலிக்கப்படத் தொடங்கிப் பின்னர் சகரமாகத் திரிந்திருக்கலாம். ஹிந்து என்ற பாரசீக வழக்கு, சிந்து என இந்திய மொழிகளில் வழங்குவதை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.

இறுதியாகப் பங்குனி என்ற கடைசி மாதப் பெயருக்கு வருவோம். ”பங்குனி உயர் அழுவத்துத் தலைநாள் மீன்” எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. அதாவது பங்குனி மாதத்தில் முழுநிலா அமைகிற முழுமையான நட்சத்திரமாகிய உத்தர பால்குண நட்சத்திரமே அதாவது உத்தரமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நாள்மீன் என்பது நட்சத்திரத்தையும், கோள்மீன் என்பது கிரகத்தையும் குறிப்பதற்குச் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாகும். அதாவது Constellation என்பது நாள்மீன் அல்லது நட்சத்திரம், Planet என்பது கோள்மீன் அல்லது கிரகம் ஆகும்.

கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். வடமொழியில் கிரகித்தல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் கிரகம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர்

உத்தர பால்குண நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் பல்குனி என வழங்கத் தொடங்கிப் பங்குனி எனத் திரிந்துள்ளது. பெயர்க் காரணம் புரியாமல் போவதில் வியப்பில்லை.

இறுதியாக ஒரு விளக்கம். இந்த நட்சத்திரப் பெயர்களும், மாதப் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களாக இருப்பதால் அவை தமிழர்களுக்கு அன்னியமானவை என்ற எண்ணம் சில தமிழ் அறிஞர்களிடையேகூட நிலவுவதாகத் தெரிகிறது. பழமையான தமிழ்க் கணியர்களான (ஜோதிடர்களாகிய) வள்ளுவர்கள், தமிழர்களே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே, பல நட்சத்திரப் பெயர்களும், மாதங்களில் பெயர்களும் திராவிட மொழிகளில் இருந்தோ, முன்னிலை ஆஸ்திராய்டு மொழிகள் என்று கருதப்படுகிற முண்டா மொழிகளில் இருந்தோ பெறப்பட்டுச் சமஸ்கிருத வடிவம் பெற்ற சொற்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதேபோன்று, வள்ளுவர்கள் வானவியல் அறிவை அனைத்திந்தியக் கல்விப் புலமாக உருவாக்குவதற்காக, சமஸ்கிருத மொழி வடிவில் இப்பெயர்களைப் பதிவு செய்திருக்கலாம். இக்காரணத்தினாலேயே வானவியல் அறிவும், பஞ்சாங்க அறிவும் தமிழர்களுக்கு அன்னியமாகிவிடா. மொழியியல் அறிஞர்கள்தாம் இது குறித்து ஆய்ந்து விளக்கம் அளிக்கத்தக்கவர்கள்.

(இக்கட்டுரைஏப்ரல் 21, 2012 அன்று மூவர் முதலிகள் முற்றம் சென்னையில் நடத்திய சித்திரைச் சிறப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவசப் பிரசுரத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம்).

கட்டுரை ஆசிரியர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழகக் கல்வெட்டுகள் குறித்த ஆழ்ந்த புலமை கொண்டவர்.

கல்வெட்டுகளை ஆய்வு செய்வது குறித்து பல புதிய கோணங்களையும், பார்வைகளையும் அளித்து வருபவர்.

 


No comments:

Post a Comment