Saturday, April 8, 2023

 


 

 

சனாதன தர்மம் என்றால் என்ன?

இந்த கேள்வியை நாம் பலமுறை எதிர் கொண்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கு இதற்கான சரியான விடை தெரியுமா என்பது சந்தேகமே. ஹிந்து மதமே சனாதன தர்மம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு வகையில் சரி என்றாலும், சனாதன தர்மம் என்பது  மதத்தைத் தாண்டிய விஷயமாகும். 

சனாதனம் என்பதற்கு புராதனம் அல்லது காலத்தால் அழியாதது’ என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் கோட்பாடுகளே சனாதன தர்மம் எனலாம்.   இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல. அதாவது ஒருவர் எந்த மதத்தவர் ஆனாலும் (அல்லது மதமற்றவராக இருந்தாலும் கூட ) அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்ற முடியும்.சனாதன தர்மத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை பார்ப்போம். 

சனாதன தர்மம்

1.உண்மை உரைத்தல்

நமது வேத நூல்களில், உண்மை பேசுவது பற்றி பல மேற்கோள்கள் உள்ளன.  உபநிஷதங்களில் ‘சத்யம் வத‘ (உண்மையைப் பேசு) போன்ற வரிகள் உள்ளன. கீழே உள்ள நீதி ஸ்லோகமும் இதையே குறிப்பிடுகிறது:

சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
ப்ரியம் சா ந அன்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சனாதன: “

அதாவது, “சத்தியமும் இனிமையும்  வாய்ந்தவற்றைப் பேசவேண்டும்.  உண்மையாய் இருப்பினும் கடுமையாக இருப்பதை பேசக் கூடாது. அதைப் போல இனிமையானதும் பொய்யானதையும் கூட பேசக்கூடாது. இதுவே சனாதன தர்மமாகும்.”

ஸ்ரீராமர் மற்றும் ராஜா அரிச்சந்திரனின் கதைகள் இந்தக் கருத்தை நமக்கு தெளிவாக விளக்குகின்றன.

2.பெரியவர்களை மதித்தல்

வேதங்களில் வயது முதிர்ந்தவர்களை மதித்தல் பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தைத்திரீய உபநிஷத்தில் கூறப் பட்டவைகளில் முக்கியமானவை கீழே:

மாத்ரு தேவோ பவ ; பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ ; அதிதி தேவோ பவ “

இந்த கலாச்சாரத்தில் தாய்-தந்தையர், குரு மற்றும் விருந்தினர்களுக்கு ஒரு மேன்மையான இடம் உண்டு. இன்றும் வீட்டில் ஒரு நல்ல சம்பவம் நடக்கும் போது நாம் நம் வீட்டு பெரியவர்களின் ஆசி பெற்றே அந்த செயலைத் தொடங்குகிறோம் அல்லவா ?

3.சுத்தம் பேணுதல்

நமது நூல்களில் சுகாதாரம் பேண விவரமாக பல விதிகள் உள்ளன. உதாரணமாககழிப்பறைக்கு செல்லுதல் , கிரகணம் போன்ற நிகழ்வுகள் முதலானவைக்குப் பிறகு  குளித்தல் மிக அவசியமாகக் கருதப்படுகிறது. அதைப்  போல நோயாளிகள், முதியவர்கள் ஆகியவர்களிடம் பேசும் பொது இடைவெளி கடைபிடித்தல், துக்க நாட்ககளில் பிரிவு அனுஷ்டித்தல் போன்றவை பற்றிய பல குறிப்புகளும் நம்மிடம் உள்ளன. நம்முடைய (பிறரைத் தொடாமல்) கை கூப்பி வணங்கும் பழக்கம் ஒன்றே நம்முடைய சுகாதாரம் பேணும் முறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

 

4 உணவின் பங்கு

நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவுகள் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. எந்த உணவுகளை சேர்த்து உண்ணலாம், எவற்றைச் சேர்க்கக் கூடாது, எவற்றை அன்றே உண்ண வேண்டும்  முதலான பல விதிமுறைகளை நாம் அதில் காணலாம். அதே போல  மஹாபாரதத்தில் வரும் சுக்ராச்சாரியார் மற்றும் கச-தேவயானி விருத்தாந்தம் மது வகைகளின் தீமை பற்றித் தெளிவாக விளக்குகிறது.

5.அஹிம்சைக்கு முக்கியத்துவம்

அஹிம்சை நமது கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகும். ‘அஹிம்சா பரமோ தர்ம:’ (அஹிம்சையே மேலான தர்மம்) என்பது நமது கோட்பாடாகும். எனவே தான் நாம் பசு முதலிய விலங்குகளுக்கு நாம் இறை ஸ்தானம் தருகிறோம். ஜீவகாருண்யத்தின் மகத்துவத்தை உணர்ந்ததால் தான் நாம் துளசி போன்ற செடிகளின் இலைகளை பறிக்கும் முன் நாம் ஸ்லோகம் சொல்லி மன்னிப்பு கோருகிறோம்.

6.ஒழுக்கமான வாழ்க்கை

நமது வாழ்க்கையானது அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகிய பேறுகளை உள்ளடக்கியது. இவற்றைச் சரிவர பின்பற்றி வாழ்ந்தோமானால் வாழ்க்கை இனியதாக இருக்கும். அப்படி இல்லாமல் பொருள் மற்றும் பிற இன்பத்தில் மனதை செலுத்தினால் வாழ்வில் துன்பமே மிஞ்சும். இதையே ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் இப்படி குறிப்பிடுகிறது.

அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்”    “ஏதத் மாம்சவஸாதி விகாரம்”

பொருளைக் கண்டு மயங்காதீர் “, ” உடல் மீது உள்ள ஆசை நிலை இல்லாதது”

7.ஒரு கடவுள்பல வடிவங்கள்

சனாதன தர்மத்தின் முக்கிய நம்பிக்கைகளில் ஒன்று – கடவுள் ஒன்றே என்றாலும் அவர் பல வடிவங்களில் வழிபடக் கூடியவர். இதனால் தான் உருவ வழிபாடு, அருவ வழிபாடு, ஒளி வழிபாடு, இயற்கை வழிபாடு, த்யானம், நாம சங்கீர்த்தனம் என எந்த விதமான வழிபாட்டு முறைக்கும் நம் மதத்தில் இடம் இருக்கிறது. புத்தம், சமணம், சீக்கிய மதம் போன்ற கிளை மதங்கள், சாக்தம், சைவம், வைணவம் போன்ற குறிப்பிட்ட கடவுள் வழிபாடு முறைகளையும் நாம் இங்கு காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனாதன தர்மத்தை கடைபிடிக்க முடியும். உதாரணமாக, இராமாயணத்தில் சக்கரவர்த்தி தசரதரின் அரசவையில் ஜாபாலி முனிவர் இத்தகைய கருத்துக்களை உடையவரே. எனினும் அரசவையில் வசிஷ்டர் முதலியவர்கள் நடுவில் அவரும் மதிக்கப் பட்டார். 

8.ஆன்மிகத்தில் அறிவியல்

பண்டைய கால மக்கள் ஆன்மிக வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும், அறிவியல் உண்மைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. பாணினி சம்ஸ்க்ருத இலக்கணத்திற்கான முதல் நூலை இயற்றினார். பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.  சுஷ்ருதர் மருத்துவத் துறைக்கு பெருஞ்சேவை செய்திருக்கிறார். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இன்றும்  பொருளுடையதாக இருக்கிறது.  இவர்கள் அனைவரும்  சனாதன தர்மத்தை வளர்த்தவர்களே.

9.உலக அமைதியே நோக்கம்

நம் ஆன்மிக நூல்கள் அனைத்திலும்  உலக நன்மையே  பிரதான நோக்கமாக உள்ளது. அமைதி என்பது ஒரு நாட்டுக்கோ அல்லது ஒரு சமூகத்திக்காக மட்டும் அல்லாமல் இந்த ப்ரபஞ்சத்துக்கே ஏற்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாகும். அதுவும் மனித குலத்திற்கு மட்டும் அன்றி பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை ஏற்பட நாம் விரும்புகிறோம்.

ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி: !

பரிணாம வளர்ச்சி

ஒன்றை கவனித்தோமானால் காலப் போக்கில் பல சாம்ராஜ்யங்கள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன வழக்கொழிந்து நசித்து போனதை உணரலாம். இதற்கு பல காரணங்கள் இருந்த போதும் மிக முக்கிய காரணம் அவை சூழலின் மாற்றத்திற்கேற்ப மாறாததே ஆகும். நம் நாகரீகம் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. ஆனால் இன்றும் அது தழைத்து வீறு நடை போட்டு வருகிறது. நாம் காணாத ஆபத்துக்களா, அனுபவிக்காத இன்னல்களா! எனினும் காலத்தின் சுழற்சியோடு நாம் மேன்மேலும் வலுப்பெற்றே வருகிறோம். 

மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களை பார்த்தோமானால், பெரும்பாலானவைகளில் கடவுள் பற்றிய குறிப்பை நாம் பார்க்கவில்லை.  ஒரு வாழக் கூடிய வழியே நம் கண்களுக்குத் தெரிகிறது. எனவே தான் சனாதன தர்மம் என்பது ஒரு வாழும் முறையே அன்றி ஒரு மதம் அல்ல என்று நாம் கூறுகிறோம்.

நாம் அனைவரும் ஒன்று கூடி நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்போமாக!

 


No comments:

Post a Comment