Wednesday, August 20, 2025

 


ஸ்ரீ  லலிதாஸஹஸ்ரநாமம்                 

வரலாறும் சிறப்புகளும்

தொகுப்ப:- 

சிவதாஸன் ஜகன்நாதன்

 

அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர்- ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உப தேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.

பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்திருக்கிறார்.

உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந் திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சம நிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான்.

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க.... அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பது தானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகஸ்தியர்.


 

அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார். ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.

பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவ தாரமும், சரிதமும் கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா ஸஹஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது.

ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப்படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவர்கள் (லோபாமுத்ரார்ச்சிதா - லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு).

தேவியின் கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக் தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு.


 

 ஸஹஸ்ரநாம நூல்களிலேயே தனித் துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர் யத்தோடும் இதில் முன் வைக்கப்படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்துள்ளது.

லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக்கருத்தை விளக்குவதாக உள்ளது. அம்பாளின் ஆயிரத் தெட்டு நாமங்களும்

 

 

1.ஸ்ரீமாதாவின்அவதாரம்,                                                                                                                            

2. கேசாதிபாதவர்ணனை (ஸ்தூல ரூபம்),                                                                               

3. பண்டாசுரவதம்,                                                                                                                                                   

4.மந்த்ரவர்ணனை(சூட்சுமரூபம்),                                                                                                                               

5. குண்டலினீரூபம்,                                                                                                                                    

6. பக்தஅனுக்ரஹம்,                                                                                                                                              

7. நிர்க்குணஉபாசனை,                                                                                                                                            

8. சகுணஉபாசனை,                                   

9. பஞ்சப்ரஹ்மரூபம்,                                                                                                                                              

10. க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞரூபம்,                                                                                                                      

11. பீடங்களும், அங்கதேவதைகளும்,                 

12. யோகினீதியானம்

13. விபூதிவிஸ்தாரமும், மார்க்கபேதங்களின்சமரசமும்,                                                          

14. சிவசக்திஐக்கியம்,  

ஆகிய வரிசையில் பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உள்ளது.  

தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா ஸஹஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது.

 சிதக்ஞனிகுண்டஸம்பூதா அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள்,                                                                                                                       ராகஸ்வரூப பாசாட்யா - ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள்,                                                                                                                                                                                       க்ரோதா கார அங்குசோஜ்வலா - தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்கு சத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள்,                                                       மனோரூப இக்ஷு கோதண்டா - மனமாகிய கரும்புவில்லை உடையவள்                                                                                                                       பஞ்சதன்மாத்ர ஸாயகா - ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள். பாசக் கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்!.

இத்துடன் இந்த பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் சந்த்ஹிப்போம்.

சிவதாஸன் ஜகன்நாதன்

ஓம் நமசிவாய

21-8-2025


 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமஸ்தோத்திரம்

 



ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

அனைவருக்கும் வணக்கம்

 ஸ்ரீ லிதா சஹ்ஸ்ரநாமம் பற்றி தினம் இரண்டு மூன்று நாமாவளிகளாக் தமிழ்ப் பொருளுடன் விளக்கலாம் என எண்ணியுள்ளேன்

இது ஒரு நீண்ட பயனுள்ள பதிவாக இருக்கும் அனைவரும் பொருளுணர்ந்து இந்த அரிய பொக்கிஷத்தை படித்து அன்னை பராசக்தின் பேரருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறேன்

ஶ்ரீலலிதாவை வணங்கினால் எல்லோரையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். அதனால்தான் ஶ்ரீவித்யை போன்ற மந்திரமோ, ஶ்ரீலலிதை போன்ற தெய்வமோ, ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரமோ அன்றி வேறில்லை என்கின்றன ஞான நூல்கள்.

பிரபஞ்சத்தின் மையத்தில் அமிர்த சாகரத்தின் நடுவே ஶ்ரீபுரம் எனும் ஶ்ரீசக்கர வடிவ நகரில், ராஜதர்பாரில் ரத்ன சிம்ஹாசனத்தில் ஶ்ரீலலிதா திரிபுர ஸுந்தரி வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ்ந்து அவளது மந்திரியான மாதங்கி, படைத் தளபதிகளான அஸ்வாரூடா, வராகி போன்ற சப்த மாதர், மற்ற மகா வித்யாக்கள் அமர்ந்திருக்கின்றனர்.

சந்தோஷம் பொங்கிப் பெருகிய வேளையில் சகல ஆன்மாக்களையும் ரக்ஷிக்க தேவி கருணை கொண்டாள். அதனால் ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலினீ, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாம துதிப்பாடல் வெளியானது. அம்பிகையின் அனந்த கோடி திருநாமங்களில் ஶ்ரீலலிதா என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால் அந்த பெயரிலேயே அவள் திருநாமங்கள் 1000 கூறும் பாடலும் உருவானது.

 

லலிதா என்றால் கொடி என்றும், வாக்கு, மனம், எழுத்து எதனாலும் எட்டமுடியாத அபூர்வ சக்தி என்றும் பொருள் கூறுவர். ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த பொருளும் அளவிட முடியாத சக்தியும் கொண்டவை. அற்புதமான இந்தத் துதிப்பாடல், ஹயக்ரீவரால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டு, அவர் மூலம் பூவுலகுக்கு வந்துசேர்ந்தது என்கிறது புராணம்.

 

இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை தினமும் ஓதுவோருக்கு                                  1)இகபர சுகங்கள் யாவுமே கிட்டும் என்கின்றன புராணங்கள்.                2)சகல யோகங்களும் சௌபாக்கியங்களும் கிட்டும். குறிப்பாக 3)குழந்தைப்பேறு,                                                                                                                             4) திருமண வரம்,                                                                                                                   5)தோஷ நிவர்த்தி,                                                                                                    6)உத்தியோக-வியாபார அபிவிருத்தி,                                                                          7)ஆனந்தமான இல்லற வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.                   மேலும் அதிகார பலமும் தொழில் வளமும் கிடைக்கும்.

சர்வ லோகங்களையும் ஆளும் பட்டமகிஷியான ஶ்ரீலலிதா பதவி உயர்வும் அரசியல் எதிர்காலமும் வழங்கக் கூடியவள். நிதி அதிகாரத்தை அதிகரிக்கும் இவள், தீய சக்திகளை விலக்கி நன்மைகளை அளிக்கக் கூடியவள். மனமொன்றி இவள் திருநாமங்களை தினந்தோறும் சொல்லி வாருங்கள்; சகல நன்மைகளும் பெறுங்க

ப்ராம்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமதை விளக்கியுள்ளர்.

பரமேஸ்வர் எரிந்துபோன மன்மதனை உயிர்ப்பித்தபோது பண்டாசுரன் என்ற அசுரனும் தோன்றினான். அவன் பெரும் சக்தி கொண்ட கொடுங்கோலனாக விள்ங்கினான்.தேவர்கள் கடுந்தவம் புரிந்து அவனை அழிக்க வல்ல ஆதிசக்தியான பராசக்தியை வழிபட்டனர். யக்ஞ்யத்திலிருந்து ஜகத்தை ஆளும் பேரழகு சக்தியான லிதாதேவி அவதரித்தார்.

ஆதியில் வாக்தேவிகளால் அம்மையை போற்றி ஓதப்பட்ட திரு நாமங்களே ப்ரம்மாண்ட புராணத்தில் ஹயக்ரீவரால் வ்யாசருக்கு உப்தேசிக்கப்பட்டன

இந்த முன்னுறையுடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.நாளை தொடர்ந்து முன்னுறையைப் பார்ப்போம்

ஓம் நம்சிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஆகஸ்ட், 20, 2025