ஸுப்ரமண்ய புஜங்கம் ஆறாவது ஸ்லோகம்
சிவதாஸன் ஜகன்நாதன்
போன வாரம் ஸுப்ரமண்ய புஜங்கத்துல அஞ்சாவது ஸ்லோகம்.
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத: ஸந்நிதெள ஸேவதாம் மே |
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||
ன்னு இந்த ஸ்லோகத்தை பார்த்தோம்.
எந்த பக்தர்கள் முருகப் பெருமானை திருச்செந்தூர்ல சேவிக்கறாளோ, அவாளுக்கு எல்லா விதமான ஆதி வியாதிகளும் நிவர்த்தி ஆயிடும்-னு இதற்கு அர்த்தம்.
இன்றைக்கு ஆறாவது ஸ்லோகம்
கிரெள மந்நிவாஸே நரா யேsதிரூடா
ததா பர்வதே ராஜதே தேsதி ரூடா |
இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட:
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து ||
ன்னு ஒரு ஸ்லோகம். ஆசார்யாள், திருச்செந்தூர் க்ஷேத்ர மஹிமையெல்லாம் சொல்லிக்கொண்டே வருகிறார். அங்கே பக்கத்துல கந்த மாதன பர்வதம் அப்படீன்னு ஒண்ணு இருக்கு. இப்ப வள்ளி குஹை-ன்னு காண்பிக்கிக்கிறார்கள். அதுதான் கந்தமாதன பர்வதம்-னு சொல்லுகிறார்கள். முருகப் பெருமான் மலையில குடியிருப்பார், இவரோட அப்பா, பரமேஸ்வரன் கைலாச மலையில இருக்கார் இல்லையா? அதனால பிள்ளையும் மலைகளை ரொம்ப விரும்பற ஸ்வாமி. அப்படி அந்த கந்தமாதன பர்வதத்துல விளங்கக் கூடிய முருகனை, அந்த வள்ளி குஹையில முருகனும், வள்ளியுமா இருக்கற ஒரு சன்னிதி இருக்கு. திருச்செந்தூர் போனா அங்கேயும் போய் அவசியம் ஸ்வாமி தர்சனம் பண்ணணும். பண்ணிணா அதோட பலன் என்னன்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.
‘யே நராஹா’ எந்த மனிதர்கள்
‘மந்நிவாஸே’ என்னுடைய வாசஸ்தானமாகிய இந்த கந்தமாதன மலையில்
‘அதிரூடாஹ’ ஏறுகிறார்களோ,
கோவில்ல ஸ்வாமி கடலை பார்த்துண்டு இருப்பார். முன்னாடி போய் தர்சனம் பண்ணணும். பக்கத்துல கொஞ்சம் தூரம் நடந்து போனா அங்க கந்தமாதான மலை, வள்ளி குஹை இருக்கும். அங்க கொஞ்சம் படி ஏறுகிற மாதிரி இருக்கும். அங்க போய்
‘அதிரூடாஹ பவந்தி’, யார் அந்த மலையில ஏறுகிறாளோ,
அங்க ஸ்வாமி தர்சனம் பன்றாளோ,
‘தே’ அவர்கள் அப்போதே,
‘ராஜதே பர்வதே’ ராஜதம்னா வெள்ளினு அர்த்தம். கைலாச மலை, வெள்ளி மலை. கைலாச மலையில்
‘அதிரூடாஹ’ ஏறி வாசம் பண்ணுகிறவர்களாக, அதவாது கைலாசத்துக்கு போன புண்யம் கிடைக்கும் அப்படீன்னு ஒரு அர்த்தம்.
இன்னொரு அர்த்தம், பகவான் எந்த உலகத்துல இருக்காரோ அந்த உலகத்துலேயே நாம போயி இருக்கறது ஒரு பெரிய பாக்யம். அதனால் தானே ஓடி ஓடிப் போய் பெரியவாளை தரிசனம் பண்றோம். அந்த அதிஷ்டானத்துக்கு போனாலே அந்த ஒரு vibration இருக்கு. அனுக்ரகம் கிடைக்கும், என்கிற மாதிரி,
அந்த முருகப் பெருமானோட பக்கத்துல இருக்கறதுங்கறது, பக்தர்கள் வேண்டும் ஒரு பாக்யம். அப்படி இந்த திருச்செந்தூர்ல வந்து இந்த கந்தமாதான மலையில ஏறி ஸ்வாமியை தர்சனம் பண்ணினா, கைலாசத்துல ஸ்வாமி பக்கத்துல இருப்பார்கள், அப்படீன்னு சொல்றார் ஆதி ஆச்சார்யாள். ‘இதி ப்ருவன் இவ’ சொல்லுகிறவர் போல், அந்த கடற்கரையில முருகப் பெருமான் இருக்கார். மலை பக்கத்துல இருக்கார்ன்னா என்ன அர்த்தம்? இந்த மலையில ஏறினா கைலாசத்துல ஏறி முருகப் பெருமான் பக்கத்துலேயே நித்யவாசம் பண்ணலாம்ன்னு அர்த்தம்-னு சொல்றார்.
‘கந்த சைலாதிரூடாஹா’ கந்த சைலத்திலிருக்கும் ‘ஷண்முக:’ ஆறுமுகத்தோடு கூடிய ‘தேவஹ’ இந்த தெய்வமான ஸுப்ரமண்ய ஸ்வாமியை தரிசித்தேன். அவர் எனக்கு ‘ஸதேவோ முதே மே ஸதா ஷண்முகோஸ்து’ ‘முதமே அஸ்து’ ன்னா எனக்கு எப்போதும் அவர் சந்தோஷத்தை கொடுக்கட்டும்ன்னு அர்த்தம். இந்த ‘ஷண்முக:’-ங்கற இடத்துல தேதியூர் சாஸ்த்ரிகள் ஆறு முகங்களை எடுத்துக்கொண்டு முருகப்பெருமான் ஆறு பேருக்கு ஷடக்ஷர மந்தரத்தை உபதேசம் பண்ணினார்ன்னு சொல்லியிருக்கார்.
அதவாது ஸநத்குமாரர், நாரத மஹரிஷி, அகஸ்தியர், ப்ரம்மா, தேவேந்திரன், சரஸ்வதி தேவி, இந்த ஆறுபேருக்கும், ஒரே காலத்துல ஷடக்ஷரி உபதேசம் பண்றதுக்காக ஆறு முகத்தை கொண்டார்ன்னு சாஸ்திரங்கள் இருக்குன்னு சொல்றார்.
, அந்த ஷடக்ஷரி மஹிமையை நான் படிக்கிறேன். முதல் எழுத்தான
ச-காரத்தால் லக்ஷ்மியும், இரண்டாவது
ர-காரத்தால் வித்தையையும், மூன்றாவது
வ-காரத்தால் போக மோக்ஷத்தையும், நான்காவது
ண-காரத்தால் சத்ரு ஸம்ஹரமும், ஐந்தாவதுஆனா
ப-காரத்தால் ம்ருத்யுவை ஜெயிப்பதும், ஆறாவதான
வ-காரத்தால் நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.
இந்த ஷண்முகரை பூஜை பண்ணினா, தர்சனம் பண்ணா, இந்த ஆறுமே கிடைக்கும். இப்படி எல்லாமே கிடைச்சிடுதுன்னா சந்தோஷம்தானே. நமக்கு சந்தோஷத்தை கொடுக்கிறார்ன்னு இருக்கு.
நமக்கு மந்த்ரங்கள் எல்லாம் முறையா ஜபிக்க முடியுமா தெரியலை, அடியார்க்கு அடியனா இருக்கலாம்ன்னு இந்த ஸ்லோகத்துல நான் புரிஞ்சுண்டேன். ஷடக்ஷரியோட பெருமை அபாரம். அந்த மந்த்ரங்களை ஜபிச்சு, முருகப் பெருமானுக்கு அடியவர்களா இருக்கறவர்களுக்கு நாம் அடியவர்களா இருப்போம்.
நம: பார்வதீ பதயே…
ஹர ஹர மகாதேவா
அடுத்த வாரம் ஏழாவது ஸ்லோகத்துடன் ச்ந்திப்போம்
ஓம் சரவணபவாய நமஹ
No comments:
Post a Comment