Thursday, August 10, 2023


திருவிளையாடற்  புராணம்

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்!

சிவதாஸன் ஜகன்நாதன்

இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது பரமசிவன் கழுத்தில் இருந்தால் கருடனால் நெருங்க முடியுமா! அதுபோல் தான் ஊரில் எத்தனை யானை இருந்தாலும், ஐராவத யானை வெள்ளை நிறம் என்பதால், அதற்கு மிகவும் கர்வம்.அகம்பாவிகளுக்கு என்றாவது ஒருநாள் அடி விழும். அப்படி ஒரு சோதனை ஐராவதம் யானைக்கும் ஏற்பட்டது.

 

இந்திரன் தேவலோகம் வந்ததும், அவனை ஏற்றிக் கொண்டு இந்திரபுரிக்குள் அட்டகாசமாக நுழைந்தது. துர்வாசர் என்ற மகரிஷி இருந்தார். அவருக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம். சிறிது பிசகலாக பேசினாலோ, நடந்தாலோ கூட மூக்கு மேல் கோபம் வந்துவிடும். அப்படிப்பட்ட கோபக்காரரிடம் அந்த யானை மாட்டிக் கொண்டது.

 

அன்று துர்வாசர் சிவபெருமானை மலர் தூவி வணங்கினார். அவரது பக்திக்கு மகிழ்ந்த ஈசன், தன் ஜடையில் இருந்த பொற்றாமரை ஒன்றை கீழே விழும்படி செய்தார். இறைவன் தந்த அந்த பிரசாதத்தை எடுத்து முனிவர் தன் கமண்டலத்தில் வைத்துக் கொண்டார். இந்திரனை தேவர்கள் ஆரவாரமாக அழைத்து வந்து கொண்டிருந்தனர். இவ்வளவு அடிபட்டும் இந்திரனுக்கு அலட்சிய குணம் மட்டும் மாறவில்லை. மேலும் விருத்திராசுரனையே வென்று விட்டோமே என்ற மமதையுடன் வந்தான். எதிரே வந்த துர்வாசர், அவன் நீடுழி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கமண்டலத்தில் இருந்த பொற்றாமரையை அவனிடம் கொடுத்தார். பிரசாதம் வாங்கும் போது பணிவு வேண்டும்.

இந்திரன் சற்றும் பணிவின்றி அந்த தாமரையை அலட்சியமாக வாங்கி அதை யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானை அதை தும்பிக்கையால் எடுத்து கால்களில் போட்டு மிதித்து விட்டது.

 

துர்வாசர் நெருப்பு பொங்கும் கண்களுடன் இந்திரனையும், யானையையும் பொசுக்கி விடுவது போல பார்த்தார். தேவேந்திரா... என்று அவர் கோபத்தில் எழுப்பிய சப்தம் அந்த பிரதேசத்தையே கிடுகிடுக்கச் செய்தது. விட்டது வினை என்று இங்கு வந்தால் இந்த துர்வாசரிடம் சிக்கிக் கொண்டோமே என்று இந்திரன் நடுங்கினான். அவன் எதிர்பார்த்தபடியே துர்வாசர் சாபமிட்டார். ஏ இந்திரா! கடம்பவன நாதனான எம்பிரானின் பிரசாதத்தையா அலட்சியம் செய்தாய்! அதை மரியாதையுடன் பெற்றிருந்தால், உன் நிலையே வேறு விதமாக இருந்திருக்கும்! ஆனால், கேடு கெட்ட இந்த யானையிடம் கொடுத்தாய். அது காலில் போட்டு மிதித்தது. தேவனாகிய நீ பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்து விடும், என்றார்.

 

தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர். யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர்.

துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். கோபம் உள்ள இடத்தில் தானே குணமும் இருக்கும்! அவர் இந்திரனிடம், இந்திரா! கொடுத்த சாபத்தை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், பாண்டிய மன்னன் பயன்படுத்தும் சக்ராயுதம் உன் தலையைக் கொய்ய வரும்போது, அது உன் கிரீடத்தை மட்டும் பறித்துச் செல்லும் நிலை வரும். தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்,

 

 என்றவர் யானையைப் பார்த்தார். ஏ ஐராவதமே! பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு உன் வாழ்க்கை இந்த உலகத்துக்கு பாடமாக இருக்க வேண்டும். உன் வெள்ளை நிறம் அழிந்து போகும். தேவலோக யானையான நீ, பூலோகம் சென்று காட்டுக்குள் பிற யானைகளுடன் கலந்து, புழுதி படிந்து நூறாண்டு காலம் திரிவாய். பின்னர், இந்திர லோகத்தை அடைவாய், என சாபமிட்டார்.

 

வெள்ளை யானை கண்ணீர் வடித்தது. பின்னர் அது பூலோகம் வந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தது. ஒருவழியாக நூறாண்டுகள் கடந்தன. பல வனங்களில் சுற்றிய அந்த யானை, கடம்ப வனத்துக்குள் புகுந்தது. அதுவே இந்திரனால் உருவாக்கப்பட்ட மதுரையம்பதி. அங்கிருந்த சொக்கலிங்கத்துக்கு அது பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தது. தங்கத் தாமரைகளைப் பறித்து வந்து தூவி வழிபட்டது.

 

அந்த யானையின் மீது இரக்கம் கொண்ட சொக்கநாதர் அதன் முன் தோன்றினார். ஐராவதமே! நீ செய்த சிவஅபச்சாரம் நீங்கியது. நீ இந்திரலோகம் திரும்பலாம்,என்றார். யானை சிவனிடம், எம்பெருமானே! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே! தங்கள் விமானத்தை (கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு) தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது. சிவபெருமான் அதனிடம், ஐராவதமே! இந்திரன் எனது பக்தன். அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும். நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார். மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார்.

 

அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது. வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது.

 

பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.

 

அடுத்தவாரம் மூன்றாவது திருவிளையாஅடஒல் பற்றிப்பார்ப்போம்

 

ஓம் நமசிவாய

 

சிவதாஸன் ஜகன்நாத்ன்

Wednesday, August 9, 2023



என்பொடு கொம்பொ(டு) ஆமை

சிவதாஸன் ஜகன்நாதன்

 

 

கோளறு பதிகத்தின் இரண்டாவது பாடலை இன்று பார்ப்போம்

 சிவதாஸன் ஜகன்நாதன்

என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க

எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்

பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்

ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்

ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்

பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்

ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்

உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்

அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.

***

முதல் பாடலில் நவகோள்கள் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொன்னார். இந்தப் பாடலில் பயணத்திற்கு ஆகாத விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) என்று தள்ளப்பட்ட நாட்களும் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொல்கிறார்.

சிவபெருமான் எலும்பு மாலை, கொம்பு, ஆமை ஓடு போன்றவை அணிந்திருக்கும் காரணத்தை மற்றோரிடத்தில் காணலாம்.

ஏழையென்றது பெண் என்னும் பொருளில். இங்கு அது உமையன்னையைக் குறித்தது. ஏழைப்பங்காளன் என்று வள்ளல் தன்மையை உடையவரைக் குறிப்பது இன்று வழக்கில் உள்ளது. அது 'ஏழைப்பங்காளன்' என்னும் சொற்றொடரின் பொருள் உணராததால் வந்த வினை. ஏழைப்பங்காளன் என்று குறிப்பிடப் படும் முழுத் தகுதியும் சிவபெருமானுக்கே உண்டு. மற்றோருக்கு இல்லை. ஏழையை (பெண்ணை) தன் உடலில் ஒரு பங்காக உடையவன் என்று இதற்குப் பொருள். அப்படி மனைவிக்கு தன் உடலில் பாதியைத் தந்தவர் அண்ணலையன்றி வேறு யார்?

சோதிட நூல்களில் 27 விண்மீன்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வார நாட்கள் ஏழும் கோள்களின் பெயர்களில் அமைந்தது போல ஒவ்வொரு மாதமும் இந்த 27 விண்மீன்களின் சுழற்சியில் வருமாறு அமைத்திருக்கின்றனர் நம் முன்னோர். நல்ல செயல் செய்யவோ எங்காவது பயணம் கிளம்பும் போதோ வார நாளைப் பார்த்தபின் அந்த நாளில் அமைந்த விண்மீனையும் பார்த்திருக்கிறார்கள். அந்த 27 விண்மீன்களில் 12 விண்மீன்களை பயணம் தொடங்க தகுதியில்லாத நாட்களாகத் தள்ளி வைத்துள்ளனர் - பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவையே அவை. அவற்றில் சிலவற்றை இந்தப் பாடலில் சம்பந்தர் குறித்து அவையெல்லாமும் கூட அடியார்க்கு மிக நல்லவையே என்கிறார்.

சோதிட நூல்களில் அசுவினியில் தொடங்கி விண்மீன்களைச் சொன்னாலும் கிருத்திகையை முதல் விண்மீனாய் சொல்லும் மரபும் இருந்திருக்கிறது. மேஷம் முதல் ராசியானதால் அது அசுவினியில் தொடங்குவதால் அசுவினியை முதலாகக் கூறும் வழக்கமும் வந்தது. ஆனால் சம்பந்தரோ இங்கு கிருத்திகையை முதலாகக் கூறும் மரபைப் பாராட்டி அந்த விண்மீன்களை எண்களாகச் சொல்லியிருக்கிறார்

 

ஓம் நமசிவாய

 

அடுத்த புதன் மூன்றாவது பாடலைப் பார்ப்போம்

                                                                                                                                                                                   சிவதாஸன் ஜகன்நாதன் 

 



 

ஸுப்ரமண்ய புஜங்கம் ஆறாவது ஸ்லோகம் 

 

சிவதாஸன் ஜகன்நாதன்

 

போன வாரம்   ஸுப்ரமண்ய புஜங்கத்துல அஞ்சாவது ஸ்லோகம்.

 

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா

ததைவாபத: ஸந்நிதெள ஸேவதாம் மே |

இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||

 

ன்னு இந்த ஸ்லோகத்தை பார்த்தோம்.

 எந்த பக்தர்கள் முருகப் பெருமானை திருச்செந்தூர்ல சேவிக்கறாளோ, அவாளுக்கு எல்லா விதமான ஆதி வியாதிகளும் நிவர்த்தி ஆயிடும்-னு இதற்கு அர்த்தம்.

 

இன்றைக்கு  ஆறாவது ஸ்லோகம்

 

 

கிரெள மந்நிவாஸே நரா யேsதிரூடா

ததா பர்வதே ராஜதே தேsதி ரூடா |

இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட:

ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து ||

 

ன்னு ஒரு ஸ்லோகம். ஆசார்யாள், திருச்செந்தூர் க்ஷேத்ர மஹிமையெல்லாம் சொல்லிக்கொண்டே வருகிறார். அங்கே பக்கத்துல கந்த மாதன பர்வதம் அப்படீன்னு ஒண்ணு இருக்கு. இப்ப வள்ளி குஹை-ன்னு  காண்பிக்கிக்கிறார்கள். அதுதான் கந்தமாதன பர்வதம்-னு சொல்லுகிறார்கள். முருகப் பெருமான் மலையில குடியிருப்பார், இவரோட அப்பா, பரமேஸ்வரன் கைலாச மலையில இருக்கார் இல்லையா? அதனால பிள்ளையும் மலைகளை ரொம்ப விரும்பற ஸ்வாமி. அப்படி அந்த கந்தமாதன பர்வதத்துல விளங்கக் கூடிய முருகனை, அந்த வள்ளி குஹையில முருகனும், வள்ளியுமா இருக்கற ஒரு சன்னிதி இருக்கு. திருச்செந்தூர் போனா அங்கேயும் போய் அவசியம் ஸ்வாமி தர்சனம் பண்ணணும். பண்ணிணா அதோட பலன் என்னன்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.

 

யே நராஹாஎந்த மனிதர்கள் 

மந்நிவாஸேஎன்னுடைய வாசஸ்தானமாகிய இந்த கந்தமாதன மலையில்

 அதிரூடாஹஏறுகிறார்களோ,

கோவில்ல ஸ்வாமி கடலை பார்த்துண்டு இருப்பார். முன்னாடி போய்  தர்சனம் பண்ணணும். பக்கத்துல கொஞ்சம் தூரம் நடந்து போனா அங்க கந்தமாதான மலை, வள்ளி குஹை இருக்கும். அங்க கொஞ்சம் படி ஏறுகிற மாதிரி இருக்கும். அங்க போய்

 அதிரூடாஹ பவந்தி’, யார் அந்த மலையில ஏறுகிறாளோ,

அங்க ஸ்வாமி தர்சனம் பன்றாளோ,

தே அவர்கள் அப்போதே,

 ராஜதே பர்வதேராஜதம்னா வெள்ளினு அர்த்தம். கைலாச மலை, வெள்ளி மலை. கைலாச மலையில்

 அதிரூடாஹ’  ஏறி வாசம் பண்ணுகிறவர்களாக, அதவாது கைலாசத்துக்கு போன புண்யம் கிடைக்கும் அப்படீன்னு ஒரு அர்த்தம்.

 

இன்னொரு அர்த்தம்,  பகவான் எந்த உலகத்துல இருக்காரோ அந்த உலகத்துலேயே நாம போயி இருக்கறது ஒரு பெரிய பாக்யம். அதனால் தானே ஓடி ஓடிப் போய் பெரியவாளை தரிசனம் பண்றோம். அந்த அதிஷ்டானத்துக்கு போனாலே அந்த ஒரு vibration இருக்கு. அனுக்ரகம் கிடைக்கும், என்கிற மாதிரி,

 

 அந்த முருகப் பெருமானோட பக்கத்துல இருக்கறதுங்கறது, பக்தர்கள் வேண்டும் ஒரு பாக்யம். அப்படி இந்த திருச்செந்தூர்ல வந்து இந்த கந்தமாதான மலையில ஏறி ஸ்வாமியை தர்சனம் பண்ணினா, கைலாசத்துல ஸ்வாமி பக்கத்துல இருப்பார்கள், அப்படீன்னு சொல்றார் ஆதி ஆச்சார்யாள். ‘இதி ப்ருவன் இவசொல்லுகிறவர் போல், அந்த கடற்கரையில முருகப் பெருமான் இருக்கார். மலை பக்கத்துல இருக்கார்ன்னா என்ன அர்த்தம்? இந்த மலையில ஏறினா கைலாசத்துல ஏறி முருகப் பெருமான் பக்கத்துலேயே நித்யவாசம் பண்ணலாம்ன்னு அர்த்தம்-னு சொல்றார்.

கந்த சைலாதிரூடாஹாகந்த சைலத்திலிருக்கும் ஷண்முக:’ ஆறுமுகத்தோடு கூடிய தேவஹஇந்த தெய்வமான ஸுப்ரமண்ய ஸ்வாமியை தரிசித்தேன். அவர் எனக்கு ஸதேவோ முதே மே ஸதா ஷண்முகோஸ்து’ ‘முதமே அஸ்துன்னா எனக்கு எப்போதும் அவர் சந்தோஷத்தை கொடுக்கட்டும்ன்னு அர்த்தம். இந்த ஷண்முக:’-ங்கற இடத்துல தேதியூர் சாஸ்த்ரிகள் ஆறு முகங்களை எடுத்துக்கொண்டு முருகப்பெருமான் ஆறு பேருக்கு ஷடக்ஷர மந்தரத்தை உபதேசம் பண்ணினார்ன்னு சொல்லியிருக்கார்.

 

அதவாது ஸநத்குமாரர், நாரத மஹரிஷி, அகஸ்தியர், ப்ரம்மா, தேவேந்திரன், சரஸ்வதி தேவி, இந்த ஆறுபேருக்கும், ஒரே காலத்துல ஷடக்ஷரி உபதேசம் பண்றதுக்காக ஆறு முகத்தை கொண்டார்ன்னு சாஸ்திரங்கள் இருக்குன்னு சொல்றார்.

 

, அந்த ஷடக்ஷரி மஹிமையை நான் படிக்கிறேன். முதல் எழுத்தான

 ச-காரத்தால் லக்ஷ்மியும், இரண்டாவது

-காரத்தால் வித்தையையும், மூன்றாவது

-காரத்தால் போக மோக்ஷத்தையும், நான்காவது

-காரத்தால் சத்ரு ஸம்ஹரமும், ஐந்தாவதுஆனா

-காரத்தால்  ம்ருத்யுவை ஜெயிப்பதும், ஆறாவதான

 வ-காரத்தால் நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.

 

இந்த ஷண்முகரை பூஜை பண்ணினா, தர்சனம் பண்ணா, இந்த ஆறுமே கிடைக்கும். இப்படி எல்லாமே கிடைச்சிடுதுன்னா சந்தோஷம்தானே. நமக்கு சந்தோஷத்தை கொடுக்கிறார்ன்னு இருக்கு.

நமக்கு மந்த்ரங்கள் எல்லாம் முறையா ஜபிக்க முடியுமா தெரியலை, அடியார்க்கு அடியனா இருக்கலாம்ன்னு இந்த ஸ்லோகத்துல நான் புரிஞ்சுண்டேன். ஷடக்ஷரியோட பெருமை அபாரம். அந்த மந்த்ரங்களை ஜபிச்சு, முருகப் பெருமானுக்கு அடியவர்களா இருக்கறவர்களுக்கு நாம் அடியவர்களா இருப்போம்.

நம: பார்வதீ பதயே

ஹர ஹர மகாதேவா

அடுத்த வாரம் ஏழாவது ஸ்லோகத்துடன் ச்ந்திப்போம்

ஓம் சரவணபவாய நமஹ