இந்துத்துவம் என்னும் ஆன்ம சாதனை
சுந்தரமூர்த்தி நாயனார் தன்னுடைய கண்ணொளிப் பதிகத்தில் கீழ்வரும் அழகிய பாஃடலைப் பாடியுள்ளார்
எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத் துள்கி உகந்து உமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.
– சுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை, திருக்கச்சி ஏகம்பம்)
எள்கல் இன்றி – தானே சிவனின் உடலில் பாதியாக இருப்பதால் அவனை வழிபட அவளுக்கு தேவை இல்லை என்ற எள்ளுதல் இல்லாமல்.
ஈசனை வழிபாடு செய்வாள் போல – அவளுக்கு ஒரு தேவையுமில்லை என்பதால் அவள் ஏதோ வரம் வேண்டி ஈசனை வழிபாடு செய்வது போல இருப்பினும் (அவ்வாறன்றி)
உள்ளத்துள்கி உகந்து உமை நங்கை – உமை நங்கை வரம் ஏதும் வேண்டாமல், அன்பு மட்டுமே பூண்டு உள்ளத்துக்குள் உருகி உகந்து அக வழிபாடு செய்து அதன் பின்
வழிபட சென்று நின்றவா கண்டு – புறத்தேயும் வழிபட லிங்க உருவில் நின்று அவ்வழிபாட்டின் அன்பு நிலையை உலகோருக்கு உணர்த்துமாறு
வெள்ளம் காட்டி வெருட்டிட: கம்பையாற்றில் பெருவெள்ளம் காட்டி அஞ்சும் சூழ்நிலையை ஏற்படுத்த
அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப் பட்ட கள்ளக் கம்பனை: தன்னிலும் பிரானை அன்பு செய்தமையால் சிவ லிங்கத்தை அணைத்த அம்பாளின் அன்பினால் மேலும் தன்னை மறைத்து நிற்க முடியாதவாறு தன்னை வெளிப்படுத்தியேயாக வேண்டியவனான கள்ளனாம் ஏகாம்பரேசுவரனான
எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே: எங்கள் சிவபெருமானை காணும் அருளை அருளி ஞானக் கண் காட்சியை எனக்கு எம்பெருமான் அருளினார்.
கொஞ்சம் வேதாந்தம், அதுவும் ஆங்கிலத்தில். இல்லை என்றால் மார்க்ஸிய வரலாற்று பிழை புரிதல். இது கிடைத்ததும் ஏனையோர் செய்யும் வழிபாட்டை எள்ளி நகையாடும் பலரை நாம் காணலாம்.
‘இதயத்துல கோவில் கட்டினாருங்கிறதால இனி எல்லாரும் இருதய நோய்க்குன்னு வழிபட வந்துடுவாங்க .. ஹி நம்மள மாதிரி ஞான மரபு தெரிஞ்சவன் இல்லை பாருங்க… ஆமா அது ஏன் சாம்பார் சாதத்துல மசாலா கொட்டியிருக்காய்ங்க…சரியான சுவையாபாசம்…’ என்பது போன்ற ஞானமரபு ஆசாமிகள் உலவுகிற பூமி இது.
பல விஷயங்களுக்கு பதில் சொல்வது போன்ற பதிகப் பாடல்.
சக்திக்கு அவனை வழிபட தேவை இல்லை. இருந்தாலும் அவனிடம் வரம் கேட்டு வழிபடுகிற இதர பக்தர்களை போல அவள் அவனை வழிபடுகிறாள்
அவளுக்கு ஒரு வரமும் தேவை இல்லை என்றாலும். சக்தியின் விமர்ச ரூபமே இக்காரண காரிய பிரபஞ்சம் என்பதை இங்கு மனதில் கொண்டால் இங்கு அம்பிகையின் வழிபாடு என்பதே அனைத்து பிரபஞ்ச இயக்கமும் என கொள்ளலாம்
’உள்ளத்துள்கி உகந்து’ என்பதும் அவளை இங்கு உமை என ஓங்காரத்துடன் இயைந்த சக்தி திருநாமத்தால் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அழைப்பதும் அனைத்திலும் இரண்டற கலந்திருக்கும் சைதன்யத்தைக் காட்டுகிறது.
பொதுவாக புற வழிபாட்டிலிருந்து அக வழிபாட்டுக்கு செல்வது சாதனை பயில்வோர் வழக்கம். அன்னையோ அகவழிபாட்டின் முடிவில் புறத்தே இயற்கையிலிருந்தே உருவாக்கி வழிபடுகிறாள். உருவமாக இறையை வழிபடுவது பாமரர் செய்வது என பேசுவோருக்கு இதில் விளக்கம் இருக்கிறது.
வெள்ளம் வருகிறது. ஈசனே வெள்ளத்தை வர வைக்கிறான். ‘ஈசனும் நானே சிவலிங்கமும் வெள்ளமும் நானே எனவே எதிலிருந்து எதை காப்பது’ என்றெல்லாம் வெத்து ஞானமரபுத்தனம் பேசி அன்னை விலகவில்லை
மாறாக தன்னைவிட மேலாக சிவலிங்கத்தை கருதி வெள்ளத்திலிருந்து அதைக் காப்பாற்ற அன்னை அதை அணைத்துக் கொள்கிறாள்.
என்றால் இன்றைக்கு நாம் பார்க்கும் சனதான தர்ம வெறுப்பு வெள்ளம், மதமாற்ற வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நம் சமுதாயத்தையும், ஆலயங்களையும் பாதுகாக்க நாம் எப்படிப்பட்ட தியாகத்துக்கு நம்மை தயார் செய்ய வேண்டும் என்பது சிவலிங்கத்தை கட்டி அணைக்கும் காமாட்சி அன்னையைக் காணும் போதெல்லாம் நம் நினைவுக்கு வர வேண்டும்.
இந்த முழுமையான அன்னியமின்மையான சிவாத்துவைத அன்பில் இன்னும் கரந்துறைய முடியாதவனாக வெளிப்படுகிறான் ஈசன்
ஈசன் வெளிப்படுகிறான் என்றால் என்ன? நம் கண்கள் மாயப்படல் கீறி திருவருள் பெற நாம் காணும் அதே காட்சிகள் சிவமயமாக மாறுகின்றன. அதே மரங்கள். அதே குருவிகள். அதே போக்குவரத்து நெரிசல். ஆனால் அனைத்தும் சிவப்பெருந்தன்மையை காட்டுகின்றன.
இக்காட்சி வேண்டின் இந்த அனுபவம் வேண்டின் நம் சிற்றுயிரினும் மேலாக இந்த தேசத்தின் மண்ணில் எழுந்த தர்மத்தை நேசிக்க வேண்டும். அபாய வெள்ளங்களை அது சந்திக்கும் போது நம் உயிரினும் மேலாக அதை நேசித்து நம் வாழ்வையே அதற்கு அர்ப்பணம் செய்ய தயாராக வேண்டும்
அப்போது அருள் நமக்கு கிட்டும். இதை எந்த தேவையும் இல்லாமல் சிவனின் பாதியாகவே இருக்கும் உமை அம்மை உணர்த்திய திருத்தலம் காஞ்சிபுரம்.
இந்துத்துவம் என்பது முழுமையான ஆன்ம சாதனை.