Sunday, March 5, 2023

 

 

நாள் என்செய்யும் 

 

கந்தரலங்காraத்தில் 38 வது பாடல்                                                               அருண்கிரிநாதர் அருளிப் பாடியது


நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த

கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு

தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!!!

இந்த உலகத்தில் எந்த நல்ல காரியம் செய்வதென்றாலும் நல்ல நேரம் பார்த்துச் செய்வது தான் வழக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது போன்ற பழமொழிகள் இந்த வழக்கத்திலிருந்து வந்தவைதான். இந்த மாதிரி ஒவ்வொரு வார நாட்களுக்கும், சந்திரனின் சுற்றில் வரும் 15 திதிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் தங்கள் அனுபவத்தில் கண்ட பலன்களைச் சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியோர். நல்ல நாளில் நல்ல நேரத்தில் நல்ல காரியத்தைத் துவக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால் நாளடைவில் இந்த நல்ல பழக்கம் ஒரு மூட நம்பிக்கை அளவு வளர்ந்து நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் பல நேரம் அமைந்துவிடுகிறது. நல்ல காரியம் எப்போதுமே நன்மையிலேயே முடியும். அதை நல்ல நேரத்தில் துவங்கினால் நன்மை மிகுதியாய்க் கிடைக்கும் என்பதே நாள் பார்க்கும் வழக்கத்தின் பொருள். ஆனால் அது நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் வந்தால் அந்த வழக்கத்தையே தூர எறிய வேண்டியது தான்.

நாளுக்கு பிறகு, ஒருவனுடைய முயற்சி வெற்றியடைவது அவனவன் முன்னர் செய்துள்ள நல்வினைத் தீவினைப் பயனை ஒட்டியே உள்ளது. அவன் நல்வினை அதிகம் செய்திருப்பின் அவன் முயற்சி சீக்கிரம் பலன் தருகிறது. தீவினை அதிகம் என்றால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. ஆனால் தெய்வப்புலவர் சொன்னது போல் 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப நவகோள்கள் பலன் தருகிறார்கள் என்பது நம் நாட்டவரின் நம்பிக்கை. நல்வினைகளின் பலன் பெருகவும் தீவினைகளின் பலன் குறையவும் நவகோள்களை வழிபட்டால் நல்லது என்றும் நம் நாட்டவர் நம்புகின்றனர்.

போகும் நேரம் வந்தால் கூற்றுவன் வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவான். என்னை விட்டுவிடு; அதோ அவன் என்னை விட வயதில் மூத்தவன்; நான் இன்னும் நிறைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பலவாறாகக் கெஞ்சினாலும் எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் அந்த கொடுங்கூற்றுவன் தன் கடமையை நிறைவேற்றிவிடுவான்.

ஆனால் முருகப் பெருமான் அருள் இருந்தால் இவை அனைத்தின் பாதிப்பிலிருந்தும் நாம் தப்பலாம் என்கிறார் அருணகிரிநாதர்.

குமரேசரின் இரண்டு திருவடிகளும், அந்த திருவடிகளில் விளங்கும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், அவனுடைய ஆறு திருமுகங்களும், திரண்ட பன்னிரு தோள்களும், அந்த தோள்களின் மேல் அணிந்த கடம்ப மாலையும், எனக்கு முன் வந்து தோன்றினால் நாள் என்னை என்ன செய்யும்? என்னுடைய நல்வினை தீவினைகள் தான் என்ன செய்யும்? என்னைத் தேடி வந்து என் வினைகளுக்கு ஏற்ப பலன் கொடுக்கும் நவகோள்கள் தான் என்ன செய்யும்? கொடிய யமன் தான் என்ன செய்யமுடியும்? ஒன்றும் செய்ய முடியாது - என்கிறார் அருணகிரிநாதர்.

அதென்ன குமரனின் அழகை வர்ணிக்கும் போது காலுக்கும், முகத்துக்கும், தோளுக்கும் தாவுகிறாரே என்றால் அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. நாம் நாளையும், வினையையும், கோளையும், கொடும் கூற்றையும் எண்ணி நடுங்கும் போது 'யாமிருக்கப் பயமேன்' என்று அவன் வருவதை நமக்கு முதன்முதலில் சொல்வது அவன் இரண்டு தாள்களும் அதில் அவன் அணிந்துள்ள ஓசை மிகுந்த சிலம்பும், சதங்கையும், தண்டையும் தானே. அதனால் அவற்றை முதலில் பாடுகிறார்.

அப்படி அவன் நம் முன்னே வந்தவுடன் நமக்குத் தெரிவது அவனது ஆறு முகங்களும் தான். அதனால் அதனை அடுத்துப் பாடுகிறார். பின்னர் தான் அவனது அழகிய பன்னிரு தோள்களும் அவற்றின் மேல் அவன் அணிந்துள்ள மணம் மிகுந்த கடம்ப மாலையும் தெரிகிறது.

சரி எப்போது இது நடக்கும்? நாம் எப்போது நம் நினைவில் அவனை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோமோ அப்போது நடக்கும். அப்படி நாம் அவனை எப்போதும் நினைத்தால் நமக்கு அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்.

சரி எப்படி நாம் அவனை எப்போதும் நம் நினைவில் வைத்துக்கொள்வது? அவன் தாளை நாம் வணங்கினால் அது நடக்கும்.

சரி நான் நினைத்தால் அவன் தாளை வணங்கிவிட முடியுமா? எத்தனையோ மயக்கங்கள் இருக்கின்றனவே எனைத் தடுக்க? உண்மைதான். அவன் அருளாலேயே அவன் தாள் வணங்க முடியும். அதனால் தான் அருணகிரியும் 'தோன்றிடினே' என்கிறார். நான் அவனைத் தோன்றவைக்கவில்லை. அவன் தனது அருளாலே தானாய்த் தோன்றினால் நாள் என் செயும்.... என்கிறார்.

அப்படி என்றால் நாம் என்ன தான் செய்வது

 

அவன் தாள் வணங்க அவன் அருளை வேண்டுவதே நாம் இப்போது செய்யக்கூடியது. அதுவே நாம் அவனை அடைய முதற்படி.

 

தொகுப்பு

சிவதாஸன் ஜகன்நாதன்


Friday, March 3, 2023

 

ஓம் எனும் பிரணவ மந்திரம்

 

 

தொகுத்தளிப்பு

சிவதாஸன் ஜகன்நாதன்

ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து வைத்துள்ள ஒரு பெயராகும்.

மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடப்படும் பெயர்கள் எல்லாம் வேதத்திலிருந்து எடுத்தே இடப்பட்டன. அதாவது அந்த பெயர்கள் அவர்களுக்கோ, மற்ற பொருட்களுக்கோ அதன் தன்மையை வெளிப்படுத்துமாறு சூடப்பட்டன. ஆனால் மனிதர்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் சில சமயம் அவர்களுக்கு பொருந்தாமல் போய்விடுவதுண்டு. உதாரணமாக, வீரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு அதற்கு பொருத்தமில்லாமல் கோழையாக இருப்பான். அதே போல் இலட்சுமி என்ற பெயர் கொண்டவள் பிச்சைக்காரியாக இருப்பாள். சரஸ்வதி என்ற பெயர் வைத்துக் கொண்டு படிப்பறிவில்லாதவளாக இருப்பாள். ஆனால் இறைவனின்  ஓம்  என்ற நாமமும் அதன் முடிவற்ற பொருளும் அந்த ஒப்பற்ற ஓர் இறைவனுக்கே முழுமுதலாய் பொருந்தியிருக்கிறது.

மனிதன் பிறக்கும் போது நாமம் இன்றி பிறக்கிறான். பிறந்த சில நாட்கள் கழித்து அவனுக்கு, பெயர் சூட்டும் விழா எடுத்து பெயர் இடப்படுகிறான். பின்பு அவன் பெற்றோர், உறவினர் மற்றும் இந்த சமூகத்தார் அவனை அந்த பெயரால் அழைக்கின்றனர். மேலும் அவன் பெற்றோர் இட்ட பெயரைத் தவிர உறவுமுறை பெயர்களாலும் அவன் அழைக்கப்படுகிறான். எடுத்துக்காட்டாக, அவனுக்கு திருமணம் ஆகியதும் கணவன் என்ற நாமமும், குழந்தை பிறந்தவுடன் அப்பா என்ற நாமமும், தன்னுடைய தாய் தந்தைக்கு மகன் என்ற நாமமும், தந்தையின் தந்தைக்கு பேரன் என்ற நாமமும், இவனுடைய மகனின்/மகளின்குழந்தைக்கு தாத்தா என்ற நாமமும் உறவுமுறைகளால் ஏற்படுகின்றன. இது தவிர, சில குணங்களையோ, குற்றங்களையோ குறிக்க சில பட்டப் பெயர்களும் அவனுக்கு சமுதாயத்தால் வாய்க்கின்றன.

 உதாரணத்திற்கு இராமனையும், ஹனுமானையும், கிருஷ்ணனையும் நாம் பல பெயர்களால் அழைக்கிறோம்.காரணம் அவர்களின் பலம், வீரம், தீரம், சூர பராக்கிரம செயல்களைப் பாராட்டி. அதே போல் இறைவனையும் நாம் சிவன், விஷ்ணு, ருத்ரன், சரஸ்வதி, சனி, குரு, இலட்சுமி, இந்திரன், மித்ரன், வருணன், யமன், வாயு, அக்னி என்று பல பெயர்களால் அழைக்கிறோம். மேற்கூறிய நாமங்கள் யாவும் இறைவனின் குணங்களையோ, தத்துவங்களையே குறிப்பனவே அல்லாமல் உருவங்களை அல்ல. மேலும் மற்ற எல்லா பெயர்களும் இறைவனின் நிஜ நாமமான ஓம் என்பதிலிருந்தே வெளிவந்தன. ஓம் இறைவனின் மிக முக்கியமான, தன்னியற்கையான நாமம். மற்ற நாமங்களெல்லாம் குணவாகுப் பெயர்களே!

 

 

 ஓம் விளக்கம் :-

, , ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ஓம் என்ற பிரணவ ஒலி பிறக்கிறது. இதில் அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து. மேலும் ‘அ’ என்பது இறைவனையும், ‘உ’ என்பது உலக உயிர்களையும், ‘ம்’ என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும். இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த ‘அ’, ‘உ’ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த ‘ம்’ என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது. மேலும் ஓம் என்பது எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பதாகும். முதலில் தாயின் கர்ப்பத்தில் அது நம்மை காக்கிறது. அதனால் நாம் நிலைப் பெற்றோம்.

இலக்கண விளக்கம்

ஓம் என்ற சொல் ஆண் பாலும் அல்ல, பெண் பாலும் அல்ல. ஒருமை ஒலியே. இதற்கு இருமையோ பன்மையோ கிடையாது. வேற்றுமை உருபுகளும் அதாவது முதலாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையுள்ள உருபுகளும் இதற்கு கிடையாது. இலக்கண வரம்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. மேலும் ஓம் ‘அவ்’ என்ற தாதுவில் – வேர்ச்சொல்லிலிருந்து உண்டாகிறது. ‘அவ்’ என்றால் இந்த உலகம் மற்றும் உயிர்களின் இரட்சகன் – பாதுகாவலன் என்று பொருள். மேலும் இது “அவ்யயம்” ஆகும். அதாவது மாறுதலற்றது, சாசுவதமானது. இலக்கணத்தில் எண், பால், இடத்தால் மாறுபாடு அடையாத சொல். (வினை உரிச்சொல், இடைச்சொல், விளிச்சொல் முதலியன). எனவே இறைவன் ஒருவனே என்பது இதன் மூலம் சித்தமாகிறது.

 மற்ற மதங்களில் ஓம் :- 

கிறிஸ்துவ மதத்தில் ஓம் என்ற சொல்  ஆமென்  என்ற ஒலியின் மூலம் உச்சரிக்கப்படுகிறது, இஸ்லாம் மதத்தில் ஓம் என்ற சொல்  ஆமீன்  என்ற சொல்லால் உச்சரிக்கப்படுகிறது. புத்த மதத்தில்  ஓம் மணி பத்மோஹம் என்று உச்சரிக்கப்படுகிறது. ஜைன மதத்தில்  ஓம் நமோ அரிஹந்தாணம்  என்று உச்சரிக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் முதல் எழுத்து ‘அ’ என்பதை  ஓமேன்  என்று உச்சரிக்கப்படுகிறது. பார்ஸி மத நூலான ஜென்தாவஸ்தாவில் ஓங்காரத்தின் பொருள் ஈஸ்வரன் ஆகும். ஆங்கிலத்தில் ஓம் என்பதை OMNI PRESENT, OMNI POTENT, OMNISCIENT என்று சொல்கிறார்கள். ஓம் என்ற ஓசையோ அதன் பொருளோ இல்லாமல் எந்த மதமும் எந்த மொழியும் இல்லை.

ஓங்கார ஜபம்

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்கப்படுகிறது:- மனிதன் மரணிக்கும் தருவாயில் யாரை ஜெபம் செய்ய வேண்டும்? என்று. ஸ்ரீகிருஷ்ணர் பதிலுரைத்தார்:- ஓங்காரத்தை ஜெபம் செய்ய வேண்டும் என்று. அவர் தன்னுடைய நாமத்தை ஜெபிக்கும்படி கூறவில்லை. மேலும் ஹரி ஓம், ராம், ராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீகிருஷ்ண, ஹரே ராம ஹரே கிருஷ்ணா, இராதேசியாம், சீதாராம், விட்டல, கோவிந்தா, கோவிந்தா, சிவா, சிவா, முருகா, முருகா, நாராயணா, நாராயணா, அரோகரா, அரோகரா என்று நாம ஜெபம் சொல்லுமாறு வேதத்தில் எங்கும் உபதேசிக்கப்படவில்லை. சிலர் “ஓம்” என்று முதலில் சொல்லாமல் மற்ற நாமங்களை முதலில் உச்சரித்து விட்டு பிறகு “ஓம்” என்று சொல்கிறார்கள். உதாரணமாக “ஹரி ஓம்” என்பது. இது சரியல்ல. ஏனெனில் வேதங்களில் முதலில் “ஓம்” என்றே உச்சரிக்கப்படுகிறது. பிறகே இறைவனின் குணங்களை குறிக்கும் மற்ற நாமங்கள் வருகின்றன.

சீக்கிய மதநூலான குரு கிரந்தஸாஹிப்பில் இறைவனின் 37 நாமங்கள் 15025 முறை வருகின்றன. அவற்றில் 230 முறை ஓம் என்ற பிரணவ மந்திரம் வருகிறது. குரு நானக்கர் சொல்கிறார் – ஓங்காரத்தின் சப்தத்தை ஜெபம் செய்யுங்கள், ஓங்காரம் உன்னுடைய குருமுகமாகும்,ஓங்காரத்தில் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று.

வேதத்தில் காலை எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன. உணவு உண்ணும் போதும், உண்ட பிறகும், தூங்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன. இவை எல்லா மந்திரங்களும் ஓம் சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவன், அவன் எல்லா இடங்களிலும், எல்லா காலத்திலும், எப்பொழுதும் உள்ளவன் ஆனதால் அவனை தியானிப்பதிலும், அவன் நாமத்தை பொருளுடன் அறிந்து உச்சரிப்பதிலும், அவனை எப்பொழுதும் நினைப்பதிலும் என்றும் நன்மையே உண்டாகும்.

தொகுப்பாளன்

சிவதாசன் ஜகன்நாதன்