வேதத்தில் வெள்ளரிக்காய் !
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே !
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே !!
நெற்றி ஒற்றைக் கண்ணனோடு நிர்த்தனம் செய்தாள்!
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே !!
–மஹா கவி பாரதி.
இந்துக்கள் இயற்கையை நேசிக்கும் அன்பர்கள். இயற்கையில் கடவுளைக் கண்டுபிடித்தவர்கள். இயற்கை மூலம் கடவுளைக் காட்டியவர்கள். இன்று எல்லோரும் புறச் சூழல் பாதுகாப்பு என்று பெரிய கூக்குரல் எழுப்புவதற்கு முன் ‘எறும்பு முதல் யானை வரை’ எல்லாவற்றுக்கும் இறை அந்தஸ்து வழங்கினவர்கள், ஒரு ஊருக்கு ‘திரு ஆனைக் கா’ என்று பெயரிட்டு பக்தி இலக்கியத்தில் யானைக்கு அழியாத இடம் கொடுத்தனர். அதன் பக்கத்திலேயே ‘திரு எறும்பூர்’ என்று மற்றொரு ஊரில் எறும்புக்கு மதிப்பு கொடுத்தனர். வேதத்தில்—உபநிஷதத்தில்– ஆலமரவிதை, பசுமாட்டின் வாலில் உள்ள முடி, உப்பு முதலியவற்றின் மூலம் கடவுள் பற்றி பாடம் நடத்தியதைப் படிக்கிறோம். இதே போல வெள்ளரிப் பழம் மூலம் ஒரு பெரிய உண்மையைக் கற்பிக்கிறது யஜூர்வேதம்.
வேதங்கள் நான்கு : ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்று. இவைகளில் சைவர்களின் தாரக மந்திரமான நமசிவாய என்னும் மந்திரம் யஜூர்வேதத்தில் வருகிறது. யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் ருத்ரத்தின் நடுவில் அமைந்துள்ளது நமசிவாய மந்திரம். அதற்குச் சற்றுப் பின்னால் சிவனின் பெருமையைக் கூறுகையில் ‘ம்ருத்யுஞ் ஜய மந்திரம்’ என்று போற்றப் படும் ஒரு சிறிய மந்திரம் வருகிறது. ரிக் வேதத்திலும் இந்த மந்திரம் இருக்கிறது (7-59-12). இதை நமக்குக் கொடையாக வழங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி.. ‘ம்ருத்யு’ என்றால் மரணம் (இறப்பு)—.அதை ஜயிக்கக்கூடிய மந்திரம் என்பதால்—-மரணத்தை வெல்லும் இம் மந்திரத்துக்கு ‘‘மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம்’’ என்று பெயர். இதில்தான் வெள்ளரிப் பழம் வருகிறது. இதோ அந்த மந்திரம்:–
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
ஸுகந்திம் = இயற்கையான நறுமணம் உடையவரும்
புஷ்டிவர்த்தனம் = கருணையால் அடியார்களை ஊட்டி வளர்ப்பவரும் ஆகிய
த்ரயம்பகம் = முக்கண்ணனை
யஜாமஹே = பூஜித்து வழிபடுகிறோம்.
உர்வாருகம் இவ = வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல
ம்ருத்யோ: = சாவினுடைய
பந்தனாத் = பிடியிலிருந்து
முக்ஷீய = உமது அருளால் விடு படுவோமாக!
மா அம்ருதாத் = முக்தி வழியில் இருந்து விலகாமல் இருப்போமாக!
ஸ்ரீ ருத்ரம் (நமகம்-சமகம்) மந்திரத்தை– கவிதாமணி, உபய பாஷா ப்ரவீண, செந்தமிழ் கவிதைச் செம்மல் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் அழகிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அதில் இந்த மந்திரப் பகுதியின் தமிழ் வடிவத்தை மட்டும் பார்ப்போம்:-
இயற்கை நறுமணம் உடைய தேவரே
ஈடில்லாக் கருணையால் அடியாரை வாழ்விக்கும்
வியத்தகு முக்கண் உடைய எம்பெரும
வினயமாய்ப் போற்றி அஞ்சலி செய்தோம்
வெள்ளரிப் பழம் காம்பினின்று விடுவதொப்ப
மேவிய உமதருளால் மரணத்திலிருந்து விடுபடவும்
தெள்ளிய சன்மார்க்க நெறியில் இருந்து யாம்
திசை மாறாதென்றும் வாழ்ந்திடுவோமாக
வேதம் படித்த சைவர்கள், விபூதி பூசும் போது இந்த மந்திரத்தைச் சொல்லிகொண்டே விபூதி இட்டுக் கொள்வார்கள். யாருக்காவது, ஆயுள் அதிகரிக்கவோ, மரண பயம் நீங்கவோ, நோய்கள் நீங்கவோ வேண்டுமானால் மிருத்யுஞ் ஜய ஹோமமும் நடத்துவது வழக்கம். இந்தச் சிறிய மந்திரத்தை அனைவரும் சொல்லலாம். முதலில் வெள்ளரிப் பழத்தை ஏன் இதில் சொன்னார்கள் என்று காண்போம்.
மற்ற பழங்கள் பழுத்தவுடன் அது கீழே விழும். பழம் விழுந்தால் அது தரும் அதிர்ச்சியை நாம் அறிவோம். கீழே விழுந்தாலும் சரி ஒருவரின் தலையில் விழுந்தாலும் சரி, அதில் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் வெள்ளரிப்பழம் மட்டும் பழுத்தவுடன் பழம் இருந்த இடத்திலேயே இருக்கும். ஒரு அங்குலம் கூட நகராது, அதன் காம்பு மட்டும் தனது தொடர்பை அழகாகத் துண்டித்துக் கொள்ளும். பழுத்த பழத்துக்கு அவ்வளவு மரியாதை. காம்பே ஒரு ‘கும்பிடு போட்டு விட்டு’ சற்றே விலகிவிடும்.
இன்று டிஸ்கவரி (Discovery Channel) சேன்னலில் இயற்கை பற்றிய டாகுமெண்டரிகளை பார்க்கையில் பூ மலர்வதையும் ,காய் வெடிப்பதையும் ‘ஸ்லோ மோஷனில்’ (Slow Motion) பார்த்து வியக்கிறோம். அந்தக் காலத்தில் பெரிய சக்திவாய்ந்த கேமராக்களும் இல்லை. அதை ‘’ஸ்லோ மோஷ’’னில் போட்டுப்பார்க்கும் வசதிகளும் இல்லை. ஆனால் நமது ரிஷிகள் தன் ஞானக் கண்களால் அதை கண்டார்களா அல்லது ஊனக் கண்களை வைத்து உன்னிப்பாகப் பார்த்தார்களா என்று சொல்லமுடியாது. நல்ல ஒரு கவிதை உவமையை நமக்குத் தந்துவிட்டார்கள்.
வெள்ளரிப் பழ உவமையின் பொருத்தத்தையும் காண்போம். வீட்டில் 80, 90 வயதுப் பாட்டி, பாட்டனார் இறந்தால் அதைக் ‘கல்யாணச் சாவு’ என்று சொல்லுவர். பெரிய வருத்தம் இருக்காது. ஏனெனில் பிறந்தவர் எல்லாம் இறப்பதை எல்லோரும் அறிவர். அது இயற்கை நியதி. ஏன் நமக்கு வருத்தம் வரவில்லை? அவர்கள் நிறைந்த வாழ்வு வாழ்ந்து பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன்களைப் பார்த்தாகிவிட்டது. அதாவது முழு வெள்ளரிப்பழம் போல ஆகிவிட்டனர். இனியும் அது இருந்தால் பழமே தன்னால் பிளவுபட்டு வெடித்துவிடும். காம்பே விலகியது போல அதிர்ச்சி இல்லாத, மிருதுவான, அழகான முறையில் மரணம் சம்பவித்தால் இறந்தவருக்கும் கஷ்டம் இல்லை, அவர்களுடைய உறவினர்களுக்கும் வருத்தம் இல்லை. அதாவது பந்தங்களை அதிரடிப் போகில் தூக்கி எறியாமல், நம்மைப் பிடித்த பந்தங்கள்—கட்டுகள்—தளைகள் — விலங்குகள் – தானாக, ‘ஸ்மூத்’தாக, விலகுவதையே வெள்ளைப்பழ உவமை காட்டுகிறது.
ஆகையாலதான் இந்த உவமை; வெள்ளரிப் பழம் காம்பில் இருந்து விடுபடுவதுபோல சாவில் இருந்து விடுபடுவோமாக. ஞானம், பழுத்த நிலையில் மரணம் சம்பவித்தால் நேரடி மோட்சம் தானே. மற்ற மரணங்களைப் போல பல ‘’மண்டகப் படிகள்’’(Stop overs) கிடையாது. இது நேரடி விமான சர்வீஸ். நடுவில் ஸ்டாப் ஓவர் (stop over) கிடையாது.– டைரக்ட் Fலைட் Direct Flight— ஆகையால் வெள்ளரி போல பழுத்த நிலையில் இறப்போம்—அது போல பந்தங்கள் கஷ்டமின்றி பிரியட்டும்—பிரிந்த பின்பு மீண்டும் பிறப்பின்றி மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வோம்– என்பதே இந்த மந்திரத்தின் பொருள் என்று ஆன்றோர் விளக்குவர்.